நோயாளிகளுக்கு 'சிகிச்சை' அளித்த டாக்டர்... 'குடும்பத்துடன்' கொரோனா பாதிப்புக்கு ஆளான துயரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உலகளவில் வேகமாக பரவிவரும் கொரோனா இந்தியாவில் இதுவரை 722 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதுவரை 13 பேர் இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவமனை ஊழியர்கள் இரவு-பகலாக உழைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சையளித்த டெல்லி மருத்துவர் குடும்பத்துடன் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளது கண்டறியப்பட்டு இருக்கிறது. டெல்லி மஜ்பூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு எப்படி கொரோனா பரவியது? என தீவிரமாக ஆராயப்பட்டது.

கடைசியில் , மருத்துவருக்கு கொரோனா தொற்று சவுதி அரேபியாவிலிருந்து இந்தியா வந்த 38 வயதுப் பெண்ணிடம் இருந்து பரவியது கண்டறியப்பட்டுள்ளது. மார்ச் 12 -ம் தேதி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்துகொண்ட அந்தப் பெண்ணுக்கு அடுத்த மூன்று நாளில் கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்பின் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கும் அடுத்த ஐந்து நாளில் கொரோனா தொற்று உறுதியானது.

தொடர்ந்து அந்த பெண்ணை அழைத்து வந்த டிரைவர், உறவினர்கள், மருத்துவர் குடும்பம் என சுமார் 72 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் மருத்துவரிடம் சிகிச்சை எடுத்த நோயாளிகள், அவரின் மனைவி, மகள் மற்றும் அவருடன் பணிபுரிந்த மருத்துவர்கள் ஆகியோர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர். பரிசோதனை முடிவில் அவரது மனைவி, மகள் இருவரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பது இன்று உறுதியாகி உள்ளது. டெல்லியில் இதுவரை 35 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்