வாடிக்கையாளரின் 'நலனே' முக்கியம்... 'சீன' நிறுவனங்களின் 'உத்தியை' கையிலெடுத்த 'டெலிவரி' நிறுவனம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஜொமேட்டோ நிறுவனம் அதன் ஊழியர்களின் உடல் வெப்பநிலையை வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்த ஏற்பாடு செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பலரும் ஜொமேட்டோ மற்றும் ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி ஆப்களில் உணவுகளை ஆர்டர் செய்துவருகின்றனர். சமீபத்தில் டெல்லியில் டெலிவரி நபர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர் டெலிவரி செய்த 72 வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டதை அடுத்து பலருக்கும் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வதற்கு அச்சம் தோன்றியுள்ளது.

இதையடுத்து அந்த அச்சத்தை போக்கும் வகையில் ஜொமேட்டோ நிறுவனம் அதன் ஊழியர்களின் உடல் வெப்பநிலையை வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்த ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி உணவு டெலிவரி செய்பவர்களின் சமீபத்தில் சோதனை செய்யப்பட்ட உடல் வெப்பநிலை ஜொமேட்டோ செயலியில் காண்பிக்கப்படும். அதன்மூலம் வாடிக்கையாளர்கள் ஊழியருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

இதற்காக ஆர்டரை எடுக்க ஜொமேட்டோ டெலிவரி ஊழியர்கள் உணவகங்களுக்கு செல்லும்போது சோதனை செய்யப்பட்டு, உடல் வெப்பநிலை அனுமதிக்கப்பட்ட 98.4 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அருகிலிருந்தால் மட்டுமே டெலிவரி செய்ய அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். தற்போதைக்கு அதிகமாக உணவு டெலிவரி செய்யும் 50% ஊழியர்களின் உடல் வெப்பநிலை மட்டுமே ஜொமேட்டோ செயலியில் வாடிக்கையாளர்களுக்குக் காண்பிக்கப்படுகிறது. விரைவில் புதிதாக உணவு டெலிவரி செய்பவர்களுடைய உடல் வெப்பநிலை குறித்த தகவல்களும் செயலியில் சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசியுள்ள ஜொமேட்டோவின் தலைமைச் செயலாளர், "அத்தியாவசிய உணவுகளை டெலிவரி செய்யும்போது வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியது எங்களுடைய கடமை. உணவு டெலிவரி செய்பவர்களின் உடல் வெப்பநிலையை வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்துவது பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது" எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக இதேபோல சீனாவில் உணவு டெலிவரி நிறுவனங்கள் உணவு டெலிவரி செய்பவர்களின் உடல் வெப்பநிலையை வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்தி வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்