“முன்பதிவு அவசியம்!”.. எப்படி பதிவு செய்வது? யாருக்கெல்லாம் முன்னுரிமை தரப்படும்? - மத்திய அரசு பிறப்பித்த ‘அதிரடி’ உத்தரவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வரும் நிலையில் பல மாதங்களாக கொரோனாவை ஒழிப்பதற்கு பல நாடுகளும் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் உழைப்பில் இறங்கின.

இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை தாயாரிக்கும் முனைப்பினைல் மூன்று முக்கிய நிறுவனங்கள் முன்னெடுத்தன. அவற்றுள் பைசர் தடுப்பூசி அமெரிக்க மற்றும் பிரிட்டன் நாடுகளில் விநியோகிக்கப்பட துவங்கியுள்ளது. இதனிடையே இந்தியாவிலும் பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனங்கள் தடுப்பூசி விநியோகிப்பதற்கான அனுமதியைக் கோரியுள்ளன. இந்தநிலையில் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியை முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு எவ்வாறு வழங்கலாம் என்பது தொடர்பான ஆலோசனைகளை ஏற்கனவே மத்திய அரசு செய்யத் தொடங்கிய நிலையில் பாதுகாப்பாக தடுப்பூசிகளை வைத்திருப்பதற்கான குளிர்சாதன வசதிகள் உடைய கிடங்குகளை தயார் நிலையில் வைத்திருப்பதாக கூறப்பட்டது. அத்துடன் ஊழல் தடுப்பு மருந்துகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல குளிர்சாதன வசதியுடைய வாகனங்களுக்கான ஏற்பாடுகளும் நடந்துள்ளன.

கொரோனா தடுப்பூசி முதலில் மருத்துவ மற்றும் மருத்துவத் துறைகளை சார்ந்து பணியாற்றும் பலருக்கு முதல் கட்டமாகவும், அடுத்தகட்டமாக நோய்த்தொற்று உள்ளவர்களுக்கும், அதன்பின்னர் அத்தியாவசிய சேவை பணிகளில் ஈடுபடும் ராணுவ அதிகாரிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படலாம் என்றும் ஏற்கனவே பேசப்பட்டு வந்தது. குறிப்பாக இந்த வைரசுக்கு எதிரான முன்களப் பணியில் ஈடுபட்டுவரும் பணியாளர்களுக்கு முதலில் வழங்கப்பட உள்ளதாகவும் அதேபோல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த தடுப்பூசியை எவ்வாறு அளிக்க வேண்டும் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது. அதனை மாநில அரசுகளுக்கும் அனுப்பி வைத்துள்ளது.

அந்த செயல்பாட்டு வழிமுறைகள் தொடர்பான அறிக்கையில் என்னென்ன நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு விரிவாக விளக்கி கூறி உள்ளது. அதில் ஒரு நாளில் அதிகபட்சம் 100 முதல் 200 பேருக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் தடுப்பூசி வழங்க வேண்டும், இதற்காக அமைக்கப்படும் முகாம்களில் 5 ஊழியர்கள் அதிகபட்சமாக இருக்கலாம். வசதிக்கேற்ப கூடுதலாக ஒரு பணியாளர் அனுமதிக்கப்படலாம், 30 நிமிடங்களுக்கு தடுப்பூசி பெற்றோர்களை கண்காணிக்க வேண்டும், அவர்களின் உடலில் எதிர்வினை ஏற்படுகிறதா என்பது குறித்து மேற்பார்வையிட வேண்டும், தடுப்பூசி போடப்படும் இடத்தில் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளன.

மேலும் தடுப்பூசி பெறுவதற்கு விரும்பும் ஒருவர் மத்திய அரசு உருவாக்கியுள்ள மென்பொருளில், மொபைல் போன் ஆப் வாயிலாகவும்,  டிஜிட்டல் இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். அப்படி முன்பதிவு செய்பவர்களுக்கு தான் தடுப்பூசி முதற்கட்டமாக வழங்க வேண்டுமென்றும், நேரடியாக தடுப்பூசி போடப்படும் முகாமிற்கு வந்து யாரும் முன் பதிவு செய்யவும் முடியாது, தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு முன்பதிவு செய்ய ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட 12 ஆவணங்களை பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த மக்கள் தொகையில் முதற்கட்டமாக 30 சதவீதத்தினருக்கு இந்த தடுப்பூசி கிடைக்கும் என்றும், தொடர்ந்து குழப்பங்களை தவிர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து பெறப்படும் தடுப்பூசியை பயன்படுத்த வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்