'இந்த ஒரு வார்த்த போதும் சாமி'... 'ஐடி' மக்களின் வயிற்றில் பாலை வார்த்த 'காக்னிசன்ட்'... 'திக்குமுக்காட வைத்த அதிரடி அறிவிப்பு'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா ஏற்படுத்தி இருக்கும் பாதிப்பின் காரணமாக, ஐடி துறையில் இருப்போர் கலங்கி நிற்கும் வேளையில், புதிதாக 20,000 பேருக்கு வேலை வழங்கப்படும் என, காக்னிசன்ட் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு உலக அளவில் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவையும் அது விட்டுவைக்கவில்லை. இதன் காரணமாகப் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் சம்பள உயர்வை நிறுத்தி வைத்துள்ளது. அதோடு இன்னும் ஒரு வருடத்திற்கு, பதிவு உயர்வு, ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை எதிர்பார்க்காதீர்கள் என அறிவித்து விட்டது.

இதற்கிடையே முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசன்ட் நிறுவனமும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாகத் தனது செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ஊரடங்கால் மார்ச் மாதத்திற்கான சேவைகள் பாதிப்படைந்துள்ள நிலையில், ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 3.5 சதவீதம் கூடுதலான அளவில் 4.2 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரயன், '' ஜனவரி, மார்ச் காலாண்டில் வருவாய் என்பது நன்கு அதிகரித்த போதும், ஏப்ரல், ஜூன் காலாண்டிலும், மற்றும் அதற்கு அடுத்து வரும் காலங்களிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாகக் காணப்படும். இதன் காரணமாக நிறுவனத்தின் வருவாய் என்பது நிச்சயம் குறையும். இதனால் நிறுவனத்தின் செலவுகள் வெகுவாக குறைக்கப்பட இருக்கிறது.

அதில் முக்கியமாக, பயண போக்குவரத்து, பொழுதுபோக்கு, மின்சாரம், தங்குமிடம் போன்ற செலவுகள் குறைக்கப்பட இருக்கிறது. அதே நேரத்தில் செலவுகள் குறைக்கப்பட்டாலும் புதிய வேலைவாய்ப்பு, மற்றும் திறன் மேம்பாட்டில் நிச்சயம் கவனம் செலுத்தப்படும். இதனால் 20,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

காக்னிசன்ட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு, ஐடி துறையில் இருப்போர், கொரோனவால் ஐடி துறையின் எதிர்காலம் என்னவாகும் என அச்சம் கொண்ட பலருக்கு, நிச்சயம் நல்ல செய்தியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்