'ஆட்டோக்குள்ள கெடச்ச பார்சல்...' 'அந்த பார்சல்ல இருந்தது தான் ஆள புடிக்குறதுக்கான லீட்...' 'உடனே அடுத்தடுத்த ஆக்சன்...' - திருட்டுக்கு பின்னாடி இருந்த சதி திட்டங்கள்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சென்னை பல்லாவரம், பம்மல் சத்யாநகர் அறிஞர் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் 45 வயதான முத்தையா. ஆட்டோ டிரைவரான இவர் எப்போதும் போல கடந்த 13-ம் தேதி இரவு ஆட்டோவை வீட்டின் அருகில் நிறுத்தியுள்ளார். ஆனால் மறுநாள் காலை ஆட்டோ அவர் நிறுத்திய இடத்தில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து முத்தையா, சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். புகாரின் பெயரில் விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர் எந்த வித துருப்பு சீட்டும் இல்லாமல் இருந்தனர்.

இந்த நிலையில், சங்கர் நகர் போலீசார், அனகாபுத்தூர் பகுதியில் கடந்த 29-ம் தேதி இரவு வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வேகமாக வந்த ஆட்டோவை விசாரித்ததில், ஆட்டோவுக்குள் இருந்த 3 பேரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே, ஆட்டோவில் வந்தவர்கள் தப்பி ஓடினர்.

காவலர்கள் விரட்டிய போதும் அவர்களை பிடிக்க முடியவில்லை. இதையடுத்து ஆட்டோவை காவல் நிலையத்துக்கு போலீசார் கொண்டு சென்ற போதுதான், இது முத்தையாவுக்குச் சொந்தமான ஆட்டோ எனத் தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோ கிடைத்த தகவலை முத்தையாவுக்கு போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆட்டோவில் இருந்த ஒரு பார்சலில் புதிய சட்டைகள் இருந்துள்ளன. மேலும் அவை, ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வாங்கியிருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் ஜவுளிக்கடை உரிமையாளரிடம் விவரத்தைக் கூறி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

வீடியோ கட்சிகளில் திருட்டில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் புதிய சட்டைகளை வாங்கிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. தொடர் விசாரணையில் இந்த இளைஞர் குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த விஜய பிரதாப் (19), திருநீர்மலை பகுதியைச் சேர்ந்த வினோத் (25) மற்றும் பாஸ்கர்(24) ஆகிய 3 பேர் என தெரியவந்தது.

அவர்களின் வீட்டுக்கு சென்ற காவல்துறையினர், வினோத் என்பவரை தவிர இருவரை பிடித்துள்ளனர். வினோத் மட்டும் தப்பி ஓடிவிட்டார். காவல்நிலையத்தில் அவர்களிடம் விசாரித்தபோது ஆட்டோவைத் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வினோத்தை தேடி வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மேலும் இவர்கள் கடந்த சில மாதங்களாக ஒன்றாகச் சேர்ந்து பைக்குகள், ஆட்டோவைத் திருடி அதை விற்று வருவதாகவும், அதனால் கிடைக்கும் பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்து வருக்கின்றனர் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்