‘இந்த கல்லை வீட்டுல வச்சா நல்லது நடக்கும்’!.. புகழ்பெற்ற ‘மலை’ கற்களை ஆன்லைனில் விற்ற நபர்.. சென்னை வந்து கைது செய்த உத்தரபிரதேச போலீஸ்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

புகழ்பெற்ற கோவர்தன மலை கற்களை ஆன்லைனில் விற்க விளம்பரம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் கோவர்தன மலை அமைந்துள்ளது. இதை அப்பகுதி மக்கள் கடவுளாக வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவர்தன மலை கற்களை வீட்டில் வைத்து வழிபட்டால் நன்மை நடக்கும் எனக் கூறி ஆன்லைன் விற்பனை தளமான இந்தியா மார்ட்டில் 5175 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக மதுரா நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் கேஷவ் முக்யா என்பவர் கோவர்தனா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து இந்தியா மார்ட் ஆன்லைன் விற்பனை தளத்தின் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த இந்தியா மார்ட் நிறுவனம், பொருட்களை விற்கவும், வாங்கவும் முயற்சி செய்பவர்களுக்கு பாலமாக மட்டுமே தங்களது நிறுவனம் செயல்படுவதாக தெரிவித்தது. மேலும் நேரடி விற்பனையில் இந்தியா மார்ட் ஈடுபடாது என்றும், இதற்கும் தங்களது நிறுவனத்துக்கும் தொடர்பில்லை எனவும் விளக்கமளித்தது.

இதனை அடுத்து தங்களது இணையதளத்தில் கோவர்தன கற்களை விற்க விளம்பரம் செய்த நபரின் விவரங்களை போலீசாரிடம் இந்தியா மார்ட் நிறுவனம் ஒப்படைத்தது. அந்த விவரங்களின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தபோது, சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் (42) என்பவர் விளம்பரம் செய்திருப்பது தெரியவந்தது. இவர் அப்பகுதியில் பூஜை பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் சென்னை வந்த உத்தரபிரதேச போலீசார், அசோக் நகர் காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன் பிரேம்குமாரை கைது செய்து உத்தரபிரதேசம் அழைத்துச் சென்றனர். இவர் உண்மையிலேயே கோவர்தன கற்களை வாங்கி விற்பனை செய்கிறாரா? அல்லது போலியான கற்களை விற்று மோசடியில் ஈடுபட்டரா? என உத்தரபிரதேச போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்