'கண்டெய்னர் லாரியை'.. 'மடக்கி மிரட்டுறது ஒரு ரகம்னா.. இன்னொரு ரகம்'.. 'சினிமாவை மிஞ்சும் நிஜ கும்பல்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் லாரிகளை பின்தொடர்ந்து செல்போன் திருட்டில் ஈடுபடும் கும்பலின் செயல் வீடியோவாக வெளியாகியுள்ளன.

சினிமா பாணியில் உயிரை பணயம் வைத்து கண்டெய்னர் லாரிகளில் ஏறி செல்போன் திருட்டில் ஈடுபட்ட இந்த கும்பலில் 3 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 3 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் போன கண்டெய்னர் லாரி ஆந்திர மாநிலம் நகரி அருகே மறிக்கப்பட்டு துப்பாக்கி முனையில் 12 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள், லாரியுடன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின்போது 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று செல்போன்களை ஏற்றிச்சென்று கொண்டிருந்தபோது கொள்ளையடிக்கப்பட்டது. அப்போது உஷாரான ஆந்திர காவல்துறை இதுகுறித்து தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகிறது. இதனிடையே மத்திய பிரதேச மாநிலம் தேவ்வாஸ் மாவட்டத்தை சேர்ந்த 11 பேர் கொண்ட கும்பல் இந்த செல்போன் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வர அந்த கும்பல் நெடுஞ்சாலையில் செல்போன்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை குறிவைத்து, கார்களிலும் இரு சக்கர வாகனங்களிலும் பின்தொடர்ந்து லாரிகளை மடக்கி துப்பாக்கியை காட்டி ஓட்டுனரை மிரட்டி கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது.

இன்னொரு விதமாக இருசக்கர வாகனம் மற்றும் காரை லாரியின் வேகத்திற்கு ஏற்ப ஓட்டிச் சென்று, கண்டெய்னர் லாரிகளின் பின் பக்கமாக சென்று, கதவுகளை வெட்டி துண்டாக்கி கதவைத் திறந்து கொள்ளையில் ஈடுபடுகின்றனர். இப்படி இரு வேறு வகையி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இந்த கும்பலை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் இருந்து 3 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள், ஒரு லாரி, ஒரு கார், கண்டைனர் சீலை உடைப்பதற்கான கருவி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த கும்பல் மத்திய பிரதேசத்தில் இருந்து வந்து ஆந்திர எல்லையில் முகாமிட்டு, அங்கு செல்போன் தயாரிப்பு தொழிற்சாலைகள் இயங்கும் பகுதியில் ஆட்களைப் போட்டு கண்காணிப்பதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். தொழிற்சாலையிலிருந்து செல்போன்களுடன் லாரிகள் புறப்பட்டவுடன் ஆந்திர மாநில எல்லைக்கு இங்கிருந்து தகவல்கள் சென்றுவிடுகின்றன. அங்கு தயாராக இருக்கும் அந்த கும்பல் சரியான நேரம், தக்க இடம் பார்த்து இந்த மாதிரியான கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர். செல்போன் கொள்ளை கும்பலை சேர்ந்த இன்னும் சிலரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்