'இன்னொரு முட்டையா கேக்குற'... '4 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்'... 'பதறவைத்த பெண் பணியாளர்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கூடுதலாக ஒரு முட்டைக் கேட்ட குழந்தையின் மீது, பெண் சமையல் பணியாளர் ஒருவர், கொதித்துக்கொண்டிருந்த கிச்சடியைத் தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில், ரகுநாத் கன்ஜ் என்னும் இடத்தில் உள்ள ஒரு பள்ளியில்,  அங்கன்வாடி போல் குழந்தைகளுக்கான மையம் செயல்பட்டு வருகின்றது. இங்கு நேற்று வழக்கம் போல் குழந்தைகள் வந்திருந்தனர். அவர்களுக்குக் காலை நேரத்தில் உணவு பரிமாறப்பட்டது. அப்போது 4 வயதான சிறுவன் ஒருவன் கூடுதலாக ஒரு முட்டைக் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனால் கோபமடைந்த செஹரி பவா எனும் பெண் சமையலர், அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த கிச்சடியைத் தூக்கி, அந்தச் சிறுவன் மீது வீசியதாகக் கூறப்படுகிறது. இதில் சிறுவன் வலியால் கதறியுள்ளான். பின்னர் அந்த சமையலர் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். சிறுவன் காயங்களுடன்  காலை 9 மணியளவில் வீட்டுக்குச் சென்றுள்ளான். இதனைக் கண்ட அவனது தாய் மினு நடந்தவற்றைக் கேட்டு தெரிந்துக் கொண்டார்.

இதன்பின்னர், சிறுவனின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பிறகே இந்தச் சம்பவம் வெளியில் தெரிந்துள்ளது. கொதித்துக் கொண்டிருந்த கிச்சடி கொதி நீர் வீசப்பட்டதில்,  சிறுவனின் கால் மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறான்.

சம்பவம் குறித்து பேசிய சிறுவனின் தாய், 'காலையில் 8 மணிக்குத் தான் எனது மகனை பள்ளிக்கூடத்தில் விட்டுச் சென்றேன். 9 மணிக்கு அவன் அழுதுக்கொண்டே வீட்டுக்கு வந்தான். உடலில் காயங்கள் இருந்ததால், பதறி போய் மருத்துவமனையில் சேர்த்தேன். பின்னர் பள்ளிக்குச் சென்று விசாரித்தபோது, ஒரு முட்டைக் கூடுதலாக கேட்டதுக்காக அவன் மீது இப்படிச் செய்துள்ளார் அந்தப் பெண்' என அவர் கூறியுள்ளார்.

மேற்குவங்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வரும் அதே வேளையில், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, அந்த பெண் சமையலர் மீது வழக்குப் பதிந்து அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

BOY, WEST BENGAL, SCHEME, SCHOKING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்