11 டைரிகள், 11 மரணங்கள்... 18 மாதங்களுக்குப் பின்... 'புராரி' வீட்டில் வாடகைக்கு 'குடியேறும்' மருத்துவர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒட்டுமொத்த இந்தியாவையும் கடந்த ஆண்டு உலுக்கிய புராரி தற்கொலை வீட்டில் மருத்துவர் ஒருவர் வாடகைக்கு குடிபுக இருக்கிறார்.

டெல்லியில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி ஒரு வீட்டிலிருந்து கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாகத் தொங்கிய 11 பேர் கண்டெடுக்கப்பட்டனர். அவர்கள் வீட்டிலிருந்து போலீசார் கைப்பற்றிய டைரியில் எப்படி தற்கொலை செய்து கொள்வது? எந்த நாளில் செய்யலாம்?உள்ளிட்ட பல்வேறு குறிப்புகளை இறப்பதற்கு முன் அவர்கள் எழுதி வைத்திருந்தனர்.

மேலும் வீட்டின் சுவர்களில் சில விசித்திரமான தடயங்களும் போலீசாருக்குக் கிடைத்தன. வீட்டின் சுவரில் மொத்தம் 11 குழாய்கள் வெளியே வந்து இணைப்பு இல்லாமல் நீட்டிக்கொண்டிருந்தன. ஆனால் அந்த குழாய்கள் உள்ளே எதனுடனும் இணைக்கப்படவில்லை. இதனால் போலீசார் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

அவர்கள் வீட்டிற்கு வெளியில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமராவை சோதித்துப் பார்த்த போலீசார் அதில் அவர்கள் வீட்டிற்கு இரவில் யாரும் வரவில்லை என்றும், அவர்கள் தற்கொலைக்கு தயாராகிய காட்சிகள் அதில் பதிவாகி இருந்ததாகவும் தெரிவித்தனர். போலீசார் அவர்கள் வீட்டை தொடர்ந்து மேலும் சோதனை செய்ததில் வீட்டில் இருந்து மொத்தம் 11 டைரிகள், போலீசாரால் கைப்பற்றப்பட்டன. அந்த டைரிகள் அனைத்தையும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே தொடர்ந்து 11 ஆண்டுகளாக எழுதி வந்துள்ளார்.

அந்த டைரியில், 'ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வையுங்கள்.அந்தத் தண்ணீரின் நிறம் எப்போது மாறுகிறதோ, அப்போது நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள் என எழுதப்பட்டுள்ளது. மேலும், இந்த சடங்குகளுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் அவிழ்க்க வேண்டும்' என எழுதப்பட்டு இருந்தது. இதனால் இந்த வழக்கு போலீசாருக்கு மிகுந்த சிக்கலை ஏற்படுத்தியது. கடைசியில் சடங்கின்போது ஏற்பட்ட விபத்தில் அவர்கள் அனைவரும் இறந்து போயிருக்கலாம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த வீடு இறந்து போன நாராயணி தேவியின் மூத்த மகன் தினேஷ் வசம் ஒப்படைக்கப்பட்டது. அந்த வீடு கசப்பான நினைவுகளை ஏற்படுத்துவதால், அந்த வீட்டை விற்கலாம் என தினேஷ் முடிவு செய்தார். ஆனால் அந்த வீட்டில் பேய்கள் இருப்பதாக தகவல் வதந்தி பரவியது. இதனால் யாரும் அந்த வீட்டை வாங்க விரும்பவில்லை. அப்படியே யாராவது விரும்பினாலும் மிகவும் குறைந்த விலைக்கு வீட்டை கேட்டனர்.

இதைத்தொடர்ந்து தினேஷ் சிலநாட்கள் அந்த வீட்டில் வந்து தங்கியிருந்து அந்த வீட்டில் எதுவும் இல்லை என்று நிரூபித்தார். மக்களின் மூட நம்பிக்கைகளை பொய்யாக்க அந்த வீட்டின் கீழ்த்தளத்தில் பிளைவுட் கடை ஒன்றையும் ஆரம்பித்தார். ஆனால் எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்தநிலையில் 18 மாதங்களுக்குப் பின் அந்த வீட்டில் மருத்துவர் மோகன் என்பவர் குடிவர இருக்கிறார்.

இதுகுறித்து அவர்,'' பேய், மூட நம்பிக்கைகள் குறித்த நம்பிக்கை எனக்கில்லை. அந்த வீட்டை டியூஷன் செல்லும்போது என்னுடைய குழந்தைகளும் பார்த்துள்ளனர். அவர்களுக்கும் அந்த வீடு மிகவும் பிடித்துள்ளது. 25,000 ரூபாய் வாடகைக்கு நல்ல வீடுதான். விரைவில் நாங்கள் அங்கு குடிபோக இருக்கிறோம்,'' என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தினேஷ்,'' அந்த கசப்பான நினைவுகளை மறக்க நினைத்து, வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்தேன். ஆனால் அட்வான்ஸ் கொடுத்தும், சிலர் வாடகைக்கு வரும் ஐடியாவில் இருந்து பின்வாங்கினர். கடந்த மாதம் மோகன் வந்து வீட்டைப்பார்த்தார். அவருக்கு வீடு பிடித்துப்போனது. சுத்தம் செய்து தரும்படி கேட்டார். தற்போது அதுதொடர்பான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. புதிய மனிதர்கள் இந்த வீட்டுக்கு வந்த பின்னராவது இந்த வீடு குறித்த நம்பிக்கைகள் மாறும் என நினைக்கிறேன்,'' என தெரிவித்து இருக்கிறார்.

மற்ற செய்திகள்