'பிக் பாஸ்' வீட்டில் தயாராகும் பட்ஜெட்'... 'பட்ஜெட்டுக்கு முன் கிண்டப்படும் அல்வா'... ரகசியம் என்ன?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தலைப்பை பார்த்து என்ன பட்ஜெட் பிக் பாஸ் வீட்டில் தயாராகிறதா? என யோசிக்க வேண்டாம். பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபடும் அதிகாரிகள் அனைவரும் 10 நாள்கள், பிக் பாஸ் வீட்டில் இருப்பதை போன்று அரசின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள்.

வருகிற பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார். பட்ஜெட்டில் என்னவெல்லாம் இடம்பெற போகிறது, வரி உயர்வு இருக்குமா, பொருட்களின் விலை குறையுமா என்பது போன்ற பல கேள்விகள் சாமானிய மக்களின் மனதில் நிழலாடுவது வழக்கமான ஒன்று. ஆனால் பட்ஜெட் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்வது நல்லது.

பட்ஜெட் ஆவணங்கள் அச்சடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாக அல்வா கிண்டும் நிகழ்வு வருடா வருடம் நடப்பது வழக்கம். நேற்று நிர்மலா சீதாராமன் அல்வா தயார் செய்து பட்ஜெட் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகளுக்கும் வழங்கினார். இந்திய கலாச்சாரத்தின் படி எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் இனிப்புடன் தொடங்குவது வழக்கம்.

அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் பட்ஜெட்டுக்கு முன்பு அல்வா கிண்டும் மரபு பின்பற்றப்படுகிறது. பல வகையான இனிப்பு பலகாரங்கள் இருந்தும், எதற்காக அல்வாவைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது. இதனிடையே பட்ஜெட் உரையினை தயாரிக்கும் பணிகள் முடிவடையும் வரை, யாரும் நிதி அமைச்சகத்தின் ரகசிய அறையில் இருந்து வெளியே செல்ல முடியாது. மொபைல் போன், மற்றும் இணையம் என எதற்கும் அனுமதி கிடையாது.

பட்ஜெட் வேலையில் ஈடுபடுபவர்களுக்கு பிரத்யேக ஐடி கார்டு வழங்கப்பட்டிருக்கும். உளவுத்துறையின் அதிகாரிகள் இந்தப் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். எனேவ யாரும் அவ்வளவு எளிதில் அங்கு சென்று விட முடியாது. அங்கிருக்கும் ஊழியர்கள் பட்ஜெட் தயாரிக்கும் பணி முடிவடையும் வரை வீட்டில் உள்ளவர்களோடு பேசவோ, அல்லது சந்திக்கவோ முடியாது. ஒருவேளை உள்ளிருக்கும் ஊழியர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களுக்காகவே ஒரு சிறப்பு மருத்துவர் உள்ளிருப்பார்.

ஆனால் அதையும் தாண்டி உடல்நிலை மோசமடைந்தால், அருகிலிருக்கும் ராம் மனோஹர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார். ஆனால், பார்வையாளர்களுக்கு அங்கேயும் அனுமதி கிடையாது. இவ்வளவு பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் தான் பட்ஜெட் தயாராகிறது. இப்போ சொல்லுங்க, இதுவும் ஒரு வகை பிக் பாஸ் வீடு தானே !

BUDGET 2020, HALWA CEREMONY, NIRMALA SITHARAMAN, FINANCE MINISTER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்