முதல்வர் பதவியேற்ற அதே நாளில் ‘ராஜினாமா’ செய்தார் எடியூரப்பா.. என்ன காரணம்..? பரபரக்கும் அரசியல் களம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடகா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக எடியூரப்பா அறிவித்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா 4-வது முறையாக பதவி ஏற்றார். 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பாஜகவில் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. ஆனால் அதிலிருந்து அப்போது 76 வயதான எடியூரப்பாவுக்கு விலக்கு அளித்து முதல்வர் பதவியை பாஜக மேலிடம் வழங்கியது.



மேலும், 2 ஆண்டுகள் முடிந்ததும் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று அப்போதே நிபந்தனையும் விதிக்கப்பட்டது. அதன்படி முதல்வர் பதவி ஏற்று இன்றுடன் (26.07.2021) 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘தனது ஆட்சிக்காலம் முழுவதும் அக்னிபரீட்சையாக அமைந்துவிட்டது. பதவி விலக வேண்டும் என டெல்லியில் இருந்து யாரும் என்னை நிர்பந்திக்கவில்லை. நானே முன்வந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன். என் மீது மதிப்பு வைத்து கர்நாடகா முதல்வராக மக்களுக்கு சேவை செய்ய 2 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்த பிரதமர் மோடி, நட்டா மற்றும் அமித்ஷாவுக்கு நன்றி’ என்று தழு தழுத்த குரலில் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் கர்நாடக முதல்வராக பதவியேற்ற அதே நாளில் ராஜினாமாவை எடியூரப்பா அறிவித்துள்ளார். இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார்? என அம்மாநில மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்