‘இதற்கு எங்களைக் கொன்றுவிட்டால் நல்லது..’ வீடியோ வெளியானதால் சிக்கிய எம்.எல்.ஏ..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தெலுங்கானா சட்டமன்றத்தில் ஒரே ஒரு பாஜக எம்.எல்.ஏ-வாக உள்ள ராஜா சிங் தனது செயலால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம்.

எம்.எல்.ஏ ராஜா சிங் தற்போது மீண்டும் ஒரு பெரிய பிரச்சனையில் சிக்கியுள்ளார். புதன்கிழமை நள்ளிரவு 2 மணியளவில் தனது ஆதரவாளர்களுடன் ஹைதராபாத்திலுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை ராணி அவந்தி பாய் சிலை இருக்கும் இடத்திற்கு ராஜா சிங் வந்துள்ளார். அங்கு வந்தவர் பழைய சிலையை எடுத்துவிட்டு புதிய சிலையை நிறுவப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ‘புதிய சிலை நிறுவ உங்களிடம் அனுமதியுள்ளதா’ எனக் கேட்டுள்ளனர். இதனால் போலீஸாருக்கும் ராஜா சிங் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின்போது போலீஸார் தன்னைக் கல்லால் தாக்கியதாகக் கூறிய ராஜா சிங் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மருத்துவமனையில் அவரைச் சந்திக்க வந்த பாஜக நிர்வாகிகளிடம், “போலீஸார் லத்தியுடன் வந்ததைப் பார்த்ததும் நாங்கள் கற்களைக் கையில் எடுத்தோம். அவர்கள் எங்களைப் பலமாகத் தாக்கினர். இப்படி எங்களைத் தாக்குவதற்கு கொன்றுவிட்டால் நல்லது என நான் கூறினேன். பிறகு காவலர்களிடம் கற்களைக் கொடுத்துவிட்டோம்” என அழுதபடியே கூறியுள்ளார். பூதாகரமாக வெடித்த இந்தப் பிரச்சனையால் தெலுங்கானா பாஜக-வினர் போலீஸாரைக் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில் ஹைதராபாத் கமிஷனர் அஞ்சனி குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதில் ராஜா சிங் தன்னைத் தானே தாக்கிக்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. ராஜாசிங் மற்றும் ஆதரவாளர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் போலீஸாரைத் தாக்கியவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. வீடியோ வெளியான பிறகு, “போலீஸார் எங்கள்மீது தடியடி நடத்தியபிறகு நானே என்னைத் தாக்கிக்கொண்டேன்” எனப் புதுவிளக்கம் அளித்துள்ளார் ராஜா சிங்.

 

 

 

MLA, VIDEORELEASED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்