‘அப்போ நூலிழையில் உயிர் தப்பினார்’.. இதேபோல் முன்பு ஒரு முறை ‘ஹெலிகாப்டர்’ விபத்தில் சிக்கிய பிபின் ராவத்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபிபின் ராவத் ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு இதேபோல் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் (Bipin Rawat) பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் (Helicopter) இன்று (08.12.2021) குன்னூரில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிபின் ராவத்தின் மனைவி உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த கேப்டன் வருண் சிங் என்ற ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 80 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குன்னூர் வெலிங்டனில் ராணுவ உயர் அதிகாரிகளுக்கான பயிற்சிப் பள்ளி உள்ளது. இங்கே இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற இருந்தது. இதில் பங்கேற்க பிபின் ராவத் உட்பட உயர் அதிகாரிகள் சிலர் ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிபின் ராவத்தின் மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிபின் ராவத் ஏற்கனவே இதுபோல் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் நினைவு கூறப்பட்டு வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு பிபின் ராவத், இந்திய ராணுவத்தில் லெஃப்டினென்ட் ஜெனரலாக (Lieutenant General) இருந்தார். அப்போது பிப்ரவரி 3-ம் தேதி பிபின் ராவத் உட்பட மூன்று ராணுவ அதிகாரிகள் நாகலாந்து மாநிலம் திமாபூரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டனர்.
இந்த ஹெலிகாப்டர் தரையிலிருந்து சுமார் 20 அடி உயரத்துக்கு மேல் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஹெலிகாப்டர் வேகமாக தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறு காயங்களுடன் அதில் பயணித்த அனைவரும் நூலிழையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து நடந்து சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்