'இந்த மாதிரி நேரத்தில வேற வழியில்ல...' 'அப்பா கத்துக் கொடுத்த தொழில் தெரியும்...' கையில் கத்திரிக்கோலோடு கலக்கும் நம்பிக்கை பெண்மணி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகணவர் வெளிமாநிலத்தில் மாட்டிக்கொண்டதால், அப்பா சொல்லி தந்த கைத்தொழில் மூலம் தன் மூன்று குழந்தைகளுக்கு உணவளித்து வரும் பீகாரை சேர்ந்த குடும்ப தலைவி சமூகவலைத்தளங்களில் கலக்கி வருகிறார்.
சுக்செயின் தேவி என்பவர் தன் மூன்று குழந்தைகளுடன் பீகார் மாநிலத்தில் வாசித்து வருகிறார். இவரின் கணவர் சண்டிகரில் வேலை செய்து வந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் வேலையையும் இழந்து, வீட்டிற்கும் திரும்ப முடியாமல் இருக்கிறார் .
இந்நிலையில் தனது மூன்று குழந்தைகளுக்கு எப்படியாவது உணவளிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டவுடன் தேவி தன் தந்தை சொல்லிக்கொடுத்த முடிவெட்டும் பணியை கையில் எடுத்துள்ளார்.
தன் அப்பா செய்யும் தொழிலை சிறுவயது முதல் பார்த்து வளர்ந்த தேவி தற்போது கத்திரிக்கோல், சீப்பு உள்ளிட்டவைகளை ஒரு துணியில் சுருட்டி எடுத்துக் கொண்டு வாடிக்கையாளர்களை தேடி ஒவ்வொரு கிராமமாக செல்கிறார். அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து தான் தற்போது தேவியும், அவரது குடும்பமும் வாழ்ந்து வருகிறது.
இதுகுறித்து சுக்செயின் தேவி கூறும் போது, முதலில் இந்த தொழிலை செய்ய எனக்கு தயக்கமாக இருந்தது. பெரும்பாலும் ஆண்களே முடிவெட்டும் செய்யும் தொழிலை மேற்கொள்வார்கள். பிறகு என் தயக்கத்தை உடைத்து வெளியே வந்தேன். என்னுடைய வாடிக்கையாளர்களும் நான் ஒரு பெண் என்பதால் முதலில் யோசித்தனர். ஆனால் இறுதியில் அவர்களும் ஏற்றுக் கொண்டு எனது பணியை மேற்கொள்ள அனுமதித்தார்கள்.
இப்போது என்னுடைய முடிவெட்டும் பணியின் மூலம் தினமும் ரூ.200 வரை சம்பாதிக்கிறேன். இது எல்லாமே என் குழந்தைகளுக்காக தான். நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கடுமையாக உழைத்து எனது குழந்தைகளை நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே எனது ஆசை' என உணர்வுபூர்வமாக கூறியுள்ளார்.
மேலும் தன்னம்பிக்கையுடன் ஊரடங்கு முடிந்த பின் தான் ஒரு பியூட்டி பார்லர் தொடங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். தேவியின் இந்த செயலுக்கு அவ்வூர் மக்கள் மட்டும் இல்லாது அவரது கதையினை பற்றி அறியும் அனைவரும் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்