'தம்பி நீங்க வந்துருங்க ப்ளீஸ்'... 'பி.டெக்' மாணவனை துரத்திய வாய்ப்பு'... மாணவனின் அட்ரா சக்க பதில்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வாழ்க்கையில் பலருக்கும் பல லட்சியங்கள் இருக்கும். அதில் அவர்களின் வாழ்க்கைச் சூழல், எதிர்கால கனவுகள் என பலவும் அடங்கி இருக்கும். பொறியியல் படிக்கும் சில மாணவர்களின் கனவு அமெரிக்கா செல்ல வேண்டும் அல்லது நாசா போன்ற பெரிய துறைகளில் வேலை செய்ய வேண்டும் என்பது தான். ஆனால் வறுமையின் பிடியில் சிக்கி தனது கல்லூரி படிப்பைப் படித்து வரும் இளைஞர் ஒருவர், அந்த நாசாவின் அழைப்பையே உதறித் தள்ளி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால்ஜி (வயது 19). இவரது தந்தை பிரேம் ரஞ்சன் குன்வார் விவசாயி. ஏழைக் குடும்பத்தில் பிறந்த கோபாலுக்கு வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற கனவு இருந்துகொண்டே இருந்தது. அரசுப் பள்ளியில் தனது படிப்பை முடித்த அவர், புதிய புதிய முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவரது கடின உழைப்பின் காரணமாகக் கடந்த  2017-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து தனது முயற்சி பற்றிக் கூறினார்.

இதைத்தொடர்ந்து அவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கும், பின்னர் ஆமதாபாத்தில் உள்ள தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளைக்கும் (என்.ஐ.எப்.) அனுப்பப்பட்டார். இங்கு கோபால்ஜி 4 புதிய கண்டுபிடிப்புகளைச் செய்து காட்டினார். அதில் வாழை இலை கழிவிலிருந்து வாழை உயிர் செல், காகித உயிர் செல், அதிக வெப்பத்தைத் தாங்கக்கூடிய கோபோனியம் அலாய் ஆகியவற்றை உருவாக்கி அசத்தினார்.

மாணவனின் திறமையை அறிந்து கொண்ட அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, நீங்கள் எங்களிடம் வந்து விடுங்கள் எனச் சிவப்பு கம்பள வரவேற்பை அளித்தது. ஆனால் இவை அனைத்தையும் உதறிய கோபால்ஜி எனது முயற்சிகளுக்கு என்னுடைய தந்தை உதவியாக இருந்தார், எனவே என்னுடைய உழைப்பு அனைத்தும் என்னுடைய தாய் நாட்டிற்கே என தெரிவித்து விட்டார். 

இதுகுறித்து பேசிய அவர், ''வாழை இலை கண்டுபிடிப்புக்குப் பிறகு, வெளிநாடுகளிலிருந்து அழைப்புகள் வரத்தொடங்கின. கோபோனியம் அலாய் கண்டுபிடிப்புக்கு நாசா அழைப்பு விடுத்தது. மேலும் அமெரிக்க விஞ்ஞானிகளும் என்னைச் சந்திக்க வந்தார்கள். அவர்களிடம் இந்தியாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எனது விருப்பத்தைக் கூறிவிட்டேன்.

மேலும் இந்தியாவில் வறுமையின் பிடியில் இருக்கும் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனநிலையை வளர்ப்பதே எனது முக்கிய திட்டம். அவர்கள் தான் நமது நாட்டின் எதிர்காலம். அதற்காக தற்போது டேராடூனில் உள்ள கிராபிக் எரா பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிப்பில் சேர்ந்து ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வருகிறேன். எனது முக்கிய நோக்கமே 100 ஆராய்ச்சி மாணவர்களைக் கண்டுபிடிப்பது தான்'' எனக் கண்ணில் நம்பிக்கையுடன் மிளிர்கிறார் கோபால்ஜி.

பல வாய்ப்புகள் தன்னை தேடி வந்தபோதும், தன்னுடைய உழைப்பு, கண்டுபிடிப்பு எல்லாம் தாய் நாட்டிற்குத் தான் என்ற கர்வத்தோடு, வறுமையில் வாடும் மாணவர்களின் அறிவியல் தாகத்தைத் தீர்க்க வேண்டும் எனத் துடிக்கும் மாணவன் கோபால்ஜிக்கு நாமும் ஒரு சலுயூட் போடலாம்.

COLLEGESTUDENT, NASA, BIHAR, GOPAL JI, B.TECH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்