'என் அம்மா கிட்ட சொன்னேன்'... 'நான் பையன் இல்ல பொண்ணு'... 'சொல்ல வந்ததை நெத்தி அடியா சொல்லிட்டாங்க'... வைரலாகும் விளம்பர வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒரே ஒரு நகைக்கடை விளம்பரம் பலரது இதயங்களை மொத்தமாக வென்றுள்ளது.

பீமா ஜுவல்லரி, திருநங்கையின் வாழ்வை மையமாக வைத்து எடுத்திருக்கும், நகைக்கடை விளம்பரப்படம் தான் சமூகவலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. மனதில் பெரும் சஞ்சலத்தோடு கடற்கரையில் தனிமையில் அமர்ந்திருக்கும் சிறுவனிலிருந்து விளம்பரம் தொடங்குகிறது. பதின்பருவதில் இருக்கும் அந்த சிறுவனுக்குத் தாடி இல்லை. அதைத் தடவிப்பார்த்துத் தவிக்கிறான் அந்த சிறுவன்.

சிறுவனின் தவிப்பை அவனது தாயும், தந்தையும் புரிந்து கொள்கிறார்கள். அந்த சிறுவனுக்கு ஒரு பரிசு கொடுக்கிறார்கள். அதைத் திறந்து பார்த்தபோது அதில் தங்கக்கொலுசு இருக்கிறது. அதைக் கால்களில் போட்டுக்கொண்டு மனம் சந்தோசப்பட ஓடுகிறான். சிறுவனின் செய்கைகளை உணர்ந்து கொண்ட அவனது பெற்றோர், தொடர்ந்து அவனுக்குப் பெண்களைப்போல் காது குத்தி அழகு பார்க்கிறார்கள்.

பெண்களுக்கான உடையையும் அவர்களே அழைத்துப்போய் வாங்கிக் கொடுக்கிறார்கள். இப்போது சிறுவன், சிறுமியாக முற்றாக மாறிப் போகிறார். அவரது நீண்ட கூந்தலை அனுசரணையோடு தாய் கட்டிவிடுகிறார். கடைசியில் கை, கழுத்து நிரம்ப நகைகளோடு அவரை முகம் நிறைந்த சிரிப்போடு திருமண மேடைக்கு வருவதாக முடிகிறது விளம்பரம்.

ஒரு 40 நொடி ஓடும் அந்த விளம்பரம் மாற்றுப்பாலினத்தவர்களின் மீது அவர்களைச் சுற்றி இருப்பவர்கள் செலுத்தவேண்டிய அன்பைக் காட்டுகிறது. இதனால் இந்த விளம்பரம் சமூகவலைத்தளங்களில் வைரலானது. பொதுவாக மாற்றுப் பாலினத்தவராக மாறுவது என்பது மனது சார்ந்தது அல்ல. அது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தினால் இது இயல்பாகவே நிகழ்கிறது.

ஆனால் இந்த புரிதல் இல்லாததால் பலரும் இதுகுறித்து பொது வெளியில் பேச தயங்குகிறார்கள். இதனால் மூன்றாம் பாலினத்தவர்கள் வீட்டைவிட்டு வெளியேறும் சூழல் ஏற்படுகிறது. பெற்றோர்கள் இந்த ஹார்மோன் மாற்றத்தைப் புரிந்து கொண்டு இதுவும் இயற்கையான ஒரு நிகழ்வு தான் என்பதை உணர்ந்து கொண்டால் இவர்கள் வீட்டைவிட்டு வெளியேறுவதும் தடுக்கப்படும்.  அப்படியான புரிதலையும் இந்த விளம்பரம் காட்டியிருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கிடையே இந்த விளம்பரப் படத்தில் ஆணாக இருந்து பெண்ணாக மாறும் பாத்திரத்தில் நடித்திருக்கும் மீரா சிங்கானியா நிஜமாகவே திருநங்கை சமூகத்தைச் சேர்ந்தவர். டெல்லியில் உள்ள அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் சோஷியாலஜி பயிலும் மீரா, பொதுவெளியில் திருநங்கை சமூகத்தின் குரலை ஒலிப்பவர். இந்த விளம்பரம் குறித்துப் பேசிய பீமா நகைக்கடையின் இணையச் செயல்பாட்டுத் தலைவர் நவ்யா சுகாஸ்,

''வளரும் பருவத்தில் தன் உடலில் ஏற்படும் மாற்றத்தைப்பார்த்து பதற்றம் அடையும் குழந்தை, சுற்றியிருப்பவர்களின் அரவணைப்பால் பெண்ணாக மாறுவதைப் பதிவுசெய்திருக்கிறோம். இது சமூக மாற்றத்துக்கான விதை'' எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ''இந்த விளம்பரம் இந்தியாவுக்கான சாதனை. இதுவரை பார்த்த விளம்பரங்களிலேயே பாலின சமத்துவத்தை வலியுறுத்துவதில் இதுவே உச்சம் பெறுகிறது'' எனப் பாராட்டியுள்ளார் ட்விட்டர் நிறுவனத்தின் தகவல்தொடர்பு ஆலோசகர் கார்த்திக் சீனிவாசன்.

இதனிடையே இதுபோன்ற விஷயங்களை பொது வெளியில் பேசினால் மட்டுமே அதுகுறித்த தெளிவான புரிதல் ஏற்படும். அதற்கான தொடக்கப் புள்ளியாக இந்த விளம்பரம் இருக்கும் என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

மற்ற செய்திகள்