'8ம் வகுப்புல தான் தோணுச்சு'... 'நான் ஆண் கிடையாது'.... 'ஆனா அப்பா எடுத்த முடிவு'...சோதனைகளைச் சாதனையாக்கிய பியான்சி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பியான்சி லைஷ்ராம் என்ற திருநங்கை மருத்துவராகி கொரோனாவிற்கு எதிராகக் களத்தில் நின்று போராடுவது பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் 27 வயதான பியான்சி லைஷ்ராம். உலகையே கொரோனா ஆட்டிப்படைத்து வரும் இந்த சூழ்நிலையில் முன்கள பணியாளராக நின்று மக்களுக்காக உழைத்து வருகிறார் பியான்சி. ஆனால் இந்த நிலையை அடைய அவர் கடந்து வந்த பாதை என்பது அவ்வளவு எளிதான ஒன்றாக அமையவில்லை. எம்.பி.பி.எஸ்  3-ஆம் ஆண்டு படித்த போதுதான் தன்னை ஒரு திருநங்கையாக இந்த சமூகத்திற்கு அவர் வெளிப்படுத்திக் கொண்டார். ஆனால் எட்டாம் வகுப்புப் படிக்கும் போதே தான் ஒரு ஆண் இல்லை, தனக்குள் இருப்பது பெண்மை என்பதை அவர் உணர்ந்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் மிகவும் சாதாரண குடும்ப சூழ்நிலையைப் பின்புலமாகக் கொண்ட அவரின் தந்தை ஒரு பேருந்து ஓட்டுநர். முன் 3 சகோதர, சகோதரிகள் உள்ளனர். பியான்சி தனக்குள் இருக்கும் பெண்மையைத் தனது குடும்பத்தில் வெளிப்படுத்திய நேரத்தில் அதை ஏற்றுக் கொள்ளாமல் அவரது தந்தை தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அவருடைய மூத்த அண்ணனோ முற்றிலும் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்துள்ளார்.பின் பல கட்ட மன உளைச்சலுக்குப் பின் 2016-ஆம் ஆண்டு தன்னை திருநங்கையாக அறிவித்துக்கொண்டுள்ளார். இந்த காலகட்டத்தில் அவர் சந்தித்த போராட்டங்கள் மற்றும் மன உளைச்சல்கள் என்பது ஏராளம்.

பின்னர் 2013 ஆண்டு திருநங்கைகளுக்கான வடகிழக்கு அழகிப் போட்டியில் பங்கேற்ற போது பியான்சி என தன் பெயரை மாற்றிக்கொண்டுள்ளார். இதற்கான அறுவை சிகிச்சையைப் புதுச்சேரியில்தான் செய்துள்ளார். டெல்லியில் உள்ள பாபு ஜக்ஜீவன்ராம் நினைவு மருத்துவமனையில் அவர் பணியாற்றிய பிறகு, NEIGRIHMS, ஷில்லாங்கில் ஒரு ஆண்டு பணியாற்றியுள்ளார். அதன் பிறகே அவருக்கு ஷிஜா மருத்துவமனையில் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது மருத்துவர்களுக்காகக் கொடுக்கப்படும் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

பியான்சி குறித்துப் பேசிய மணிப்பூர் திருநங்கைகளுக்கான ஆர்வலர், ''பியான்சி அனைவரிடமும் அன்பாகப் பழகுபவர். நோயாளிகளையும் உறவுகள் போல் அணுகி சிகிச்சை அளிக்கிறார். கடினமாக உழைத்து அவர் இந்த நிலைக்கு வந்துள்ளார். பியான்சி பல திருநங்கைகளுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார் எனக் கூறியுள்ள அவர், இதுபோன்ற செயல்பாடுகள் மூலம் திருநங்கைகள் மேல் சமூகத்தில் உள்ள பார்வை மாறும் எனக் கூறியுள்ளார். தனக்குத் திருமணம் செய்து கொள்வதில் தற்போது ஆர்வம் இல்லை எனக் கூறியுள்ள பியான்சி,  மருத்துவத் துறையில் கவனம் செலுத்துவதே முழு நேரப் பணி எனக் கூறியுள்ளார்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்