'கொரோனாவில் இருந்து மீண்ட கையோடு'... 'மருத்துவர் உட்பட 6 பேரின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர்!'... 'நெகிழ வைக்கும் சம்பவம்'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனாவில் இருந்து மீண்ட இளைஞர் ஒருவர் பிளாஸ்மா தானம் செய்து 6 பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் குணால் கானா  (21). இவர் ஸ்காட்லாந்தில் படித்து வந்த நிலையில் கொரோனா பரவலால் கடந்த மார்ச் மாத இறுதியில் அங்கிருந்து பெங்களூருவுக்கு திரும்பியுள்ளார். பின்னர் வீட்டு தனிமையில் இருந்து வந்த குணாலுக்கு திடீரென காய்ச்சல் வர, பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கே.ஜி.அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் சிகிச்சை பயனாக கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் குணாலிடம் அவருடைய நண்பர்கள் பிளாஸ்மா தானம் அளித்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முன்வர வேண்டும் என்று கேட்டு கொண்டதால் அவர் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்துள்ளார். இதுபற்றி அறிந்த கே.ஜி.அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பிளாஸ்மா தானம் செய்யும்படி குணாலிடம் கேட்க, அதன்படி கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி முதல்முறையாக குணால் பிளாஸ்மா தானம் செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஜெயதேவா ஆஸ்பத்திரியில் பணியாற்றும் இதய மருத்துவ நிபுணர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட, அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்து மருத்துவமனை நிர்வாகம், குணாலை தொடர்பு கொண்டுள்ளது. அதன்பேரில் அவர் 2வது முறையாக கடந்த ஜூலை மாத இறுதியில் பிளாஸ்மா தானம் செய்துள்ளார். அவரிடம் இருந்து பெறப்பட்ட பிளாஸ்மா மூலம் தற்போது  மருத்துவர் உட்பட 6 கொரோனா நோயாளிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். பிளாஸ்மா தானம் கொடுத்து தனது உயிரை காப்பாற்றிய குணாலுக்கு ஜெயதேவா அரசு மருத்துவமனை இதய மருத்துவ நிபுணர் வீடியோ கால் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்