‘நடுவானில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி’!.. ‘அய்யோ என்ன பண்றதுன்னே தெரியலையே’.. கடவுள் மாதிரி வந்த ஒரு பயணி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நடுவானில் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு விமான கேபின் குழு ஊழியர்களின் உதவியுடன் பிரசவம் பார்க்கப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பெங்களூருவில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு இன்று அதிகாலை 5.45 மணிக்கு 6E 460 இண்டிகோ விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது பெண் பயணி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த சக பயணிகள், உடனே கேபின் குழு ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர்.

அப்போது அந்த விமானத்தில் பயணித்த மருத்துவர் சுபகானா நசீர் என்பவர் அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க முன்வந்தார். இதனை அடுத்து கேபின் குழு ஊழியர்களின் உதவியுடன், மருத்துவர் சுபகானா நசீர் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். இதில் அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து உடனடியாக ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு தகவலளித்த விமானி, மருத்துவ குழுவுடன் ஆம்புலன்ஸை தயாராக இருக்க வேண்டும் என கூறினார். இந்த விமானம் காலை 8 மணிக்கு ஜெய்ப்பூரை வந்தடைந்தது. சரியான நேரத்தில் உதவி செய்த மருத்துவர் சுபகானா நசீருக்கு இண்டிகோ நிறுவனத்தினர் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தெரிவித்த இண்டிகோ நிறுவனம், 6E 460 விமானத்தில் டிக்கெட் இல்லா பயணியும், அவரின் தாயும் நலமுடன் இருப்பதாக நகைச்சுவையாக தெரிவித்தார். கடந்த ஆண்டு டெல்லியில் இருந்து பெங்களூரு சென்ற இண்டிகோ விமானத்தில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்