'பள்ளிகள் திறப்பதில் தாமதம்'... 'ஆனா எல்லாத்துக்கும் ஒரே வழி இதுதான்'... எய்ம்ஸ் இயக்குநர் முக்கிய தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலால் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

கொரோனா இரண்டாவது அலை காரணமாகப் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில் மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துவது குறித்து எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ளார்.

அதில், ''குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்துவது என்பது ஒரு மைல்கல் சாதனையாக இருக்கும். 2 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டு மற்றும் மூன்றாம் கட்டப் பரிசோதனை முடிவு செப்டம்பர் மாதம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பிறகு குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடங்கும். எனினும் அதற்கு முன்னர் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒப்புதல் கிடைத்தால் அந்தத் தடுப்பூசியைக் குழந்தைகளுக்குச் செலுத்த வாய்ப்புள்ளது. மேலும் இந்திய மருந்து நிறுவனமான சைடஸ் கேடில்லா தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசியான சைகோவ்-டி விரைவில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தடுப்பூசி அவசரக் கால ஒப்புதலுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் விண்ணப்பம் செய்ய உள்ளது. இதைக் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என இரு தரப்புக்கும் செலுத்தலாம். சைகோவிக்-டி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் அதுவும் குழந்தைகளுக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கும். எனவே கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து வெளியே வரத் தடுப்பூசியே சிறந்த வழி'' என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்