'தொல்லியல் படிப்புக்கான கல்வித்தகுதியில்'... 'தமிழ் மொழி சேர்ப்பு'... - 'பிரதமருக்கு நன்றி தெரிவித்து'... 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்!'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய தொல்லியல் படிப்புக்கான கல்வித்தகுதியில் மீண்டும் தமிழ் மொழியை சேர்த்ததற்காக பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

மத்திய கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும் இந்தியத் தொல்லியல் துறையின் தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரியில் 2 ஆண்டு தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்புக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்தப் படிப்புக்கான அறிவிப்பில் குறைந்தபட்ச கல்வித்தகுதியாக முதுகலைப் பட்டப்படிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தொல்லியல் சார்ந்த இந்திய செம்மொழிகளான சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபிக் அல்லது பெர்சியன் மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். இந்த மொழிகளில் சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம் ஆகிய செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் தமிழ் மொழி இடம்பெறவில்லை.

இதையடுத்து அப்பட்டியலில் தமிழ் மொழியையும் சேர்க்க வேண்டும் என தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில்  மத்திய தொல்லியல் துறை பட்டயப் படிப்பில் செம்மொழியான தமிழை மீண்டும் சேர்த்து மத்திய அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து மத்திய தொல்லியல் படிப்புக்கான கல்வித்தகுதியில் மீண்டும் தமிழ் மொழியை சேர்த்ததற்காக பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், "தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரியில் 2 ஆண்டு தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்புக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியாக குறிப்பிடப்பட்டுள்ள முதுகலைப் பட்டப்படிப்பில் தமிழ் மொழியைச் சேர்க்க வேண்டும் என, நான் வலியுறுத்தியதையடுத்து உடனடியாக தமிழ் மொழியைச் சேர்க்க நடவடிக்கை எடுத்ததற்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்