‘தந்தை படத்துடன் கட்சிக்கொடி’!.. புதிய கட்சி தொடங்கினார் ஜெகன்மோகன் ரெட்டி தங்கை.. சூடு பிடிக்கும் அரசியல் களம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி, கடந்த 2009-ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதன்பிறகு அவரது மகன் ஜெயமோகன் ரெட்டி காங்கிரஸில் இருந்து விலகி, 2011-ம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை தொடங்கினார். இதனை அடுத்து 2019-ம் ஆண்டு நடந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பல பிரச்சார வியூகங்களை வகுத்தார். இதனால் அப்போது ஆட்சியில் இருந்த சந்திரபாபு நாயுடுவின் தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியை வீழ்த்தி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.

ஜெகன்மோகன் ரெட்டி தனிக்கட்சி தொடங்கிய காலத்தில், அந்த கட்சி மாநிலம் முழுவதும் சென்றடைய அவரது தங்கை ஷர்மிளா முக்கிய காரணமாக இருந்தார். குறிப்பாக, சட்டமன்ற தேர்தலில்போது அண்ணன் ஜெகன்மோகன் ரெட்டியை ஆதரித்து ஷர்மிளா மேற்கொண்ட மாபெரும் பாதயாத்திரைவின் விளைவாக ஒஸ்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆந்திர மக்களிடம் முழுமையாக சென்றடைந்தது.

முன்னதாக 2014-ம் ஆண்டு ஆந்திரப்பிரதேசம் என்ற மாநிலம் ஆந்திரா, தெலுங்கானா என்று இரண்டாக பிரிக்கப்பட்டது. ஆனால் ஆந்திர மாநிலத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததால், தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இல்லாமல் போனது. சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றதும், தெலுங்கானாவின் பக்கம் தனது கவனத்தை முழுமையாக குறைத்துக் கொண்டார்.

இதனை தெளிவாக புரிந்துக்கொண்ட ஷர்மிளா தனது அரசியல் பயணத்தை தெலுங்கானாவின் பக்கம் திருப்பினார். கடந்த ஏப்ரல் மாதம் தெலுங்கானாவில் பிரமாண்ட பேரணி நடத்தி, புதிய கட்சி தொடங்க உள்ளதாக ஷர்மிளா அறிவித்தார். அதன்படி தனது தந்தை ராஜசேகர ரெட்டியின் பிறந்தநாளான நேற்று ‘ஒஸ்.எஸ்.ஆர் தெலுங்கானா’ என்ற புதிய கட்சியை அறிவித்தார். மேலும் தந்தை புகைப்படத்துடன் கூடிய கட்சி கொடியையும் அறிமுகம் செய்தார். இதில் சகோதரரும், ஆந்திர முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி கலந்துகொள்ளவில்லை. அவரது தாயார் விஜயம்மா கலந்துகொண்டார்.

இந்த நிலையில் தெலுங்கானாவில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி மீது ஷர்மிளா பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அதில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூறியுள்ளார். மேலும் தெலுங்கானா-ஆந்திராவுக்கு இடையேயான நதி நீர் பங்கீடு குறித்தும் பேசியுள்ளார். அண்ணன் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் முதல்வராக உள்ள நிலையில், தங்கை ஷர்மிளா தெலுங்கானாவில் புதிய கட்சியை தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்