'கிட்ட கூட போக முடியல அவ்வளவு நாற்றம்'... 'ஆனா இதுவும் என்னோட வேலை தான்'... நெட்டிசன்களின் மொத்த இதயத்தை அள்ளிய பெண் எஸ்ஐ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திர பிரதேச மாநிலம், ஸ்ரீககுளம் என்னும் மாவட்டத்தில் அமைந்துள்ள அதவி கொத்துரு என்னும் கிராமத்தில் விவசாய நிலம் ஒன்று அமைந்துள்ளது.

இந்த விவசாய நிலத்தில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக காசிபக்கா காவல் நிலையத்திற்கு நேற்று தகவல் கிடைத்தது. இதனையடுத்து, பெண் உதவி ஆய்வாளர் கொட்டுரு சிரிஷா (K.Sirisha), முதியவரின் சடலத்தை பார்வையிட, கான்ஸ்டபிள் சிலருடன் அங்கு சென்றுள்ளார்.

முதியவரின் சடலம் அழுகி துர்நாற்றம் வீச ஆரம்பித்திருந்தது. எனவே, அங்கிருந்தவர்கள் யாரும் சடலத்தின் அருகில் கூட செல்ல விரும்பவில்லை. இறந்து போன முதியவர் குறித்து அந்த பெண் உதவி ஆய்வாளர் விசாரித்த நிலையில், அவர் ஒரு யாசகர் என தெரிய வந்துள்ளது. மேற்படி, தகவல்கள் எதுவும் முதியவர் குறித்து தெரியவில்லை.

இதனைத் தொடர்ந்து, இறந்த முதியவருக்கு இறுதி மரியாதை செய்ய தொண்டு நிறுவனம் ஒன்றை சிரிஷா அழைத்துப் பேசியுள்ளார். முதியவரின் பிணம் இருந்த இடத்தில் இருந்து, காவல்துறை வாகனம் இருந்த இடத்திற்கு செல்ல சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் இருந்தது. முதியவரின் சடலத்தை எடுத்துச் செல்ல கிராம மக்களிடம் சிரிஷா உதவி கோரியுள்ளார்.

உதவிக்கு யாரும் வராத நிலையில், தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருவருடன், பெண் ஆய்வாளர் சிரிஷாவே முதியவரின் சடலத்தை சுமந்து சென்றுள்ளார். அது மட்டுமிலலாமல், இறுதி மரியாதை செலுத்துவதற்காக தனது சொந்த பணத்தில் இருந்து சிறிது தொகையளித்தும் சிரிஷா உதவி செய்திருக்கிறார்.

பெண் காவல் ஆய்வாளரின் இந்த செயல் தொடர்பான வீடியோவை, ஆந்திர பிரதேச காவல்துறை தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. தற்போது இந்த வீடியோ அதிகம் வைரலாகி வரும் நிலையில், ஆந்திர மாநில காவல்துறை டிஜிபி கௌதம் சுவாங் உட்பட பல்வேறு அதிகாரிகளும், பொது மக்களும், பெண் உதவி ஆய்வாளர் செயலை பாராட்டி வருகிறார்கள்.

 

இதுகுறித்து பேசிய சிரிஷா, 'நான் எனது கடமையைத் தான் செய்தேன். இதில், பெரிதாக குறிப்பிட என்ன இருக்கிறது. ஆனால், இதற்காக உயரதிகாரிகள் என்னை பாராட்டியது மகிழ்ச்சியளிக்கிறது. அதிலும் குறிப்பாக, டிஜிபி இதுபற்றி கேட்டு விட்டு, 'ஒரு பெண்ணாக நீங்கள் இதை செய்தது பாராட்டுக்குரியது' என்றார். நேரமும், தேவையும் ஏற்படும் போது தயக்கமின்றி சேவை செய்ய வேண்டும் என எனக்கு கூறப்பட்டுள்ளது. இது காவல் பணியை விட மேலானது. இது போன்ற என் சேவைகள் தொடரும்' என அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்