'அந்த டாக்டர் புள்ள ராத்திரி, பகல்னு பார்க்காம ஓடி வருமே'... 'அவருக்கா இந்த நிலைமை'... 'மொத்த பில் 2 கோடி'... நெகிழ வைத்த ஒட்டுமொத்த கிராமம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மருத்துவ தம்பதி கிராம மக்களுக்கு இரவு, பகலாக மருத்துவ சேவை புரிந்ததோடு, கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொண்டனர்.

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் பாஸ்கர் ராவ். இவர் ஆரம்பச் சுகாதார மையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி. மருத்துவருமான அவரும் குண்டூர் மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் கரஞ்சேடு கிராம மக்களுக்கு இரவு, பகலாக மருத்துவ சேவை புரிந்ததோடு, கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொண்டனர்.

மருத்துவராகி கிராமங்களில் மருத்துவப்பணி செய்வது தான் பாஸ்கர் ராவின் நோக்கமாக இருந்தது. இதனால் இரவு பகல் பாராமல் பாஸ்கர் ராவ் பணியாற்றி வந்த நிலையில். மருத்துவ தம்பதியான கணவன், மனைவி இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பாக்கியலட்சுமி மட்டும் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டார். ஆனால், பாஸ்கர் ராவ் தீவிர நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டார்.

முதலில் அவர், குண்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நுரையீரல் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், மேல் சிகிச்சைக்காக ரூ.2 கோடி வரை செலவாகலாம் எனவும் கூறினர். இதைக் கேட்டு அவரது மனைவி பாக்கியலட்சுமி அதிர்ச்சி அடைந்தார்.

இருந்தாலும் கணவரைக் காப்பாற்றி விட வேண்டும் என்ற வேகத்தில், தனது நண்பர்கள், உறவினர்கள் மூலமாக, சிறிதளவு பணத்தைத் திரட்டினார். அந்த பணத்தை வைத்துக் கொண்டு கணவரை ஐதராபாத் கச்சிபல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். மேலும் தனக்குத் தெரிந்த சிலர் மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும் பணத்தைத் திரட்ட முடிவு செய்தார்.

இந்த சூழ்நிலையில் மருத்துவர் பாஸ்கர் ராவ் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் எனும் தகவல் கரஞ்சேடு கிராம மக்களுக்கு எட்டியது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், தங்களுக்காக இரவு பகல் பாராமல் உழைத்த மருத்துவரை நாம் கைவிட்டு விடக் கூடாது என அவரது சிகிச்சைக்கான பணத்தைத் திரட்ட முடிவு செய்தனர். அதன்படி, பலர் தங்களால் முடிந்த அளவு பணத்தைச் சேர்த்தனர்.

பலர் சேமிப்பு பணத்தைக் கூட மருத்துவரின் உயிர் காக்கக் கொடுக்க முன் வந்தனர். அதன்படி ரூ.20 லட்சம் வரை சேர்ந்தது. அவற்றை மருத்துவர் பாக்கியலட்சுமியிடம் கொடுத்து, இந்த பணத்தை வைத்துக்கொண்டு மருத்துவச் செலவைக் கவனியுங்கள் எனக் கூறினர். இதற்கிடையே மருத்துவர் பாஸ்கர் ராவ் பாதிக்கப்பட்டது குறித்து ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்குத் தெரியவந்தது.

உடனே அவர், பாஸ்கர் ராவின் சிகிச்சைக்கு ஆகும் மொத்த செலவையும் அரசே ஏற்கும் என் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து பாஸ்கர் ராவுக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. எந்த ஒரு பிரதி பலனையும் பாராமல் கிராம மக்களுக்காக உழைத்த மருத்துவருக்கு அந்த கிராமமே வந்து தோள் கொடுத்த நிலையில், அரசும் மருத்துவரின் மருத்துவச் செலவை ஏற்றுள்ள நிகழ்வு பலரையும் நெகிழச் செய்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்