'நிச்சயம் நான் சட்டசபைக்கு போவேன்'... '12ம் வகுப்புல வீட்டை விட்டு போன நேரத்துல பட்ட கஷ்டம்'... யார் இந்த குமாரி அலெக்ஸ்?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நிச்சயம் என்னுடைய குரல் சட்டசபையில் எதிரொலிக்கும் என அனன்யா குமாரி அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்தவர் தான் அனன்யா குமாரி அலெக்ஸ். இவருக்கு வானொலி வர்ணனையாளர், ஒப்பனைக் கலைஞர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல முகங்கள் உண்டு. 28 வயதான இவர் ஒரு திருநங்கை. பாலின சமத்துவத்துக்காகத் தொடர்ந்து போராடி வரும் இவர், ஜனநாயக சமூக நீதிக் கட்சி சார்பில் வெங்கரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

அந்த தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் குஞ்சாலிக் குட்டிக்கு எனத் தனி செல்வாக்கு உள்ளது. இந்நிலையில் அந்த தொகுதியில் மூன்றாம் பாலினத்தவரான அனன்யா குமாரி அலெக்ஸ் களம் இறங்கியிருப்பது பலரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது. அனன்யா, ஹார்மோன்களின் மாறுபட்ட தன்மையால் அவர் பள்ளி காலத்திலேயே தன்னை மூன்றாம் பாலினத்தவராக உணர்ந்தார். 

கொல்லம் மாவட்டத்தின் பெருமண் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட அவரை, அந்த நிலையிலேயே அவரது குடும்பமோ, பழகிய நண்பர்களோ ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் வேறு வழி இல்லாமல் அனன்யா 12ம் வகுப்பு படிக்கும் போது வீட்டை விட்டு வெளியேறினார். அங்கிருந்து பெங்களூரு சென்றவரைத் திருநங்கை மேக்கப் கலைஞர் ரெஞ்சு ரெஞ்சிமார் தத்தெடுத்து வளர்த்தார். அதன்பின்பு கேரளா வந்த அனன்யா, தனது திறனை வளர்த்துக் கொண்டு ரேடியோ ஜாக்கியாக உருவெடுத்தார்.

சமீபத்தில் எர்ணாகுளத்தில் அண்மையில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவை இவர்தான் தொகுத்து வழங்கினார். இதற்கிடையே தேர்தலில் போட்டியிடுவது குறித்துப் பேசிய அனன்யா குமாரி, ''திருநங்கைகளுக்கும் அரசியல் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். கேரள தேர்தலில் போட்டியிடும் முதல் மூன்றாம் பாலினத்தவர் நான் தான். இந்தத் தேர்தலை எங்களின் அடையாளத்தை, கோரிக்கையை எடுத்து வைக்கும் ஒரு வாய்ப்பாகத்தான் பார்க்கிறேன்.

அது நிச்சயம் ஏதாவது ஒரு பிரபலத்தை எதிர்த்துத் தான் நிற்க வேண்டும். அப்படி நினைத்துதான் வெங்கராவைத் தேர்ந்தெடுத்தேன். நான் வெற்றி பெறும் பட்சத்தில் சட்டப்பேரவையில் திருநங்கைகளைத் துன்புறுத்துபவர்களுக்கு எதிராகக் கடுமையான தண்டனை கொடுக்கும் வகையில் சட்டம் இயற்றக் குரல் கொடுப்பேன். அதேபோல் திருநங்கைகள் அவர்கள் சொந்த வீட்டிலேயே வாழும் சூழலுக்கு வழிவகுக்கும் சட்டங்களை இயற்றவும் பாடுபடுவேன். 

ஏனென்றால் நான் 12-ம் வகுப்பில் வீட்டை விட்டு வெளியேறிய போது தங்குவதற்கு இடம் இல்லாமல் நான் பட்ட கஷ்டங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கட்சி, சாதி, மதம் கடந்து சிந்திக்கும் கேரள மக்கள் என்னையும் மனதார ஏற்பார்கள் என நம்புகிறேன். மூன்றாம் பாலினத்தவரின் சட்டமன்றத்தை நோக்கிய பயணத்தை நான் தொடங்கி இருக்கிறேன் என்பதே நிச்சயம் எனக்குப் பெருமை தான் என உற்சாகத்துடன் கூறியுள்ளார் அனன்யா குமாரி அலெக்ஸ்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்