'2.77 ஏக்கர் நிலம் யாருக்கு'?...'அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு'...ஹை அலெர்ட்டில் முக்கிய இடங்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு? என்பது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி நாடுமுழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம், யாருக்கு சொந்தம் என்பதில் நீண்ட காலமாக பிரச்சனை நீடித்து வருகிறது. இதுதொடர்பாக கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்றம், அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என தனது தீர்ப்பில் கூறியிருந்தது. ஆனால் இந்த தீர்ப்பை ஏற்று கொள்ளாத அந்த அமைப்புகள் அதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன.

இதனை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இதனிடையே விசாரணை ஒரு பக்கம் நடைபெற்று வந்தபோதிலும், நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காணும் யோசனையை  அரசியல் சாசன அமர்வு முன்வைத்தது. அதன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரை கொண்ட சமரச குழுவை அமைத்தது.

அந்த குழுவின் சார்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அது தோல்வியில் முடிந்தது. இதையடுத்து ஆகஸ்டு 6-ந் தேதி முதல் இந்த வழக்கு விசாரணையை அரசியல் சாசன அமர்வு தினசரி விசாரித்து வந்தது. விசாரணையின் போது சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா தரப்பினர் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர். 40 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணை கடந்த மாதம் 16-ந் தேதியுடன் முடிவடைந்தது.

இந்நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நேற்று உத்தரபிரதேச மாநில தலைமைச் செயலாளர் ராஜேந்திர குமார் திவாரி, டி.ஜி.பி. ஓம்பிரகாஷ் சிங் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். அதில் உத்தரபிரதேச மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் மற்றும் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இதனைத்தொடர்ந்து அயோத்தி மேல்முறையீட்டு வழக்கில் அரசியல் சாசன அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு வழங்கப்பட இருக்கிறது.

இதையடுத்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக குறிப்பாக அயோத்திக்கு பாதுகாப்பு பணிக்காக 4 ஆயிரம் துணை ராணுவ வீரர்களை மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

UTTARPRADESH, AYODHYA VERDICT, SUPREME COURT, SECURITY TIGHTENED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்