'தீ வச்சு கொளுத்திடுவேன்...' 'பைக் பறிமுதல் செய்ததால்...' 'நெருப்போடு நடுரோட்டில் நடந்த இளைஞர், கடைசியில்...' அதிர்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் ஊரடங்கு தடையை மீறி சாலையில் சென்ற பைக்கை பறிமுதல் செய்ததால் வாகன உரிமையாளர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனோ வைரசால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முன்னோடியாக உள்ளது கேரள மாநிலம். ஆனால் இன்று காலை இடுக்கியில் நடைபெற்ற சம்பவம் கேரளமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனோ வைரஸை தடுக்க மருத்துவர்களும், காவல்துறையினரும் தூய்மை பணியாளரும் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். பொதுமக்கள் அத்யாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டிலிருந்து வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கேரளவில் மூணாறு அடுத்துள்ள சூரியநெல்லி பகுதியில் வசிக்கும் விஜய பிரகாஷ் (24) கடந்த 4,5 நாட்களாக தனது பைக்கில் சூரியநெல்லி நகர் பகுதியில் அங்கும் இங்குமாக சுற்றி வந்துள்ளார். இதனை கவனித்து வந்த காவல்துறையினர் பல முறை அவரை கண்டித்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். ஆனால் எச்சரிக்கையை மீறி மீண்டும் பைக்கில் சுற்றியதால் அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சாந்தம்பாறை காவல்துறையினர்  விஜய பிரகாஷின் பைக்கை பறிமுதல் செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த விஜய பிரகாஷ் வாகனத்தில் இருந்த டீசலை தன் மீது ஊற்றிக் கொண்டு, தனது பைக்கை தருமாறும், இல்லையென்றால் காவல்துறையினரையும் கொளுத்தி தானும் கொளுத்தி கொள்வேன் என கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார். அவரை சமாதானம் படுத்த போலீசார் முயற்சி செய்துகொண்டிருந்த போது திடீரென தன்னைத் தானே கொளுத்தி கொண்டு சூரியநெல்லி டவுன் பகுதியில் நடுரோட்டில் நடந்து வந்தார்.

இதனை கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்து அருகில் இருந்த தண்ணீரை ஊற்றியும் துணிகளை கொண்டும் தீயை அணைத்தனர். பலத்த தீக்காயத்துடன் மயங்கி விழுந்த அவரை கோட்டயம் மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி விஜயபிரகாஷ் உயிரிழந்தார். மேலும் இது குறித்து சாந்தம்பாறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்