காட்டுக்குள் பதுங்கியிருந்த குற்றவாளி.. நள்ளிரவில் வலைவீசிப் பிடித்த 4 பெண் அதிகாரிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குஜராத் தீவிரவாத எதிர்ப்பு குழுவின் பெண்கள் அணி, நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளியை வலை வீசி பிடித்துள்ள சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது.

குஜராத்தில் கொலை, காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகளை சுட்டது உள்பட, 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவன் பத்மாஷ் ஜுசப் அலஹ்ரகா சந்த். இந்த பத்மாஷ் காவல்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்து வந்தான். கிட்டத்தட்ட ஓராண்டாக அடர்ந்த காட்டுக்குள் தலைமறைவாக இருந்துள்ளான். காவல்துறையினர் தேடிவரும்போது தனது இடத்தை காட்டுக்குள்ளேயே மாற்றிக் கொண்டிருந்தான். பத்மாஷிடம் செல்போன் இல்லாததால், அவனைப் பிடிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

பத்மாஷைப் பிடிக்க குஜராத் தீவிரவாத எதிர்ப்புக் குழுவின் பெண்கள் அணியினருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பின்னர், பெண் அதிகாரிகளான சான்டோக் பென், நிட்டிமிக்கா, அருணா பென், ஷகுந்தலா பென் ஆகியோர், பத்மாஷை பிடிக்கும் பணியை தீவிரப்படுத்தினர். இவர்கள் நால்வரும், கடந்த மூன்று மாதங்களாக குற்றவாளி பத்மாஷை பிடிக்க திட்டம் தீட்டி வந்தனர். அதன்படி, அந்த மாநிலத்தின் பொடத் மாவட்டத்தில் உள்ள தேவ்தாரி வனப்பகுதியில், குற்றவாளி பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது.

இதையடுத்து அந்தப் பகுதியில் ஏ.கே. 47 உடன் சென்ற 4 பெண்கள் கொண்ட குழுவினர் தேடுதல் வேட்டை நடத்தினர். நள்ளிரவில் அடர்ந்த வனப்பகுதியில் மறைந்திருந்த பத்மாஷ் ஜுசப் அலஹ்ரகாரை,  4 பெண் அதிகாரிகளும் கைது செய்து சி.ஐ.டி. அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தைரியத்துடன் செயல்பட்டு குற்றவாளியை பிடித்த 4 பெண் அதிகாரிகளுக்கும், பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

GUJARAT, CULPRIT, ARRESTED, ATS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்