காலையில கேட்ட ‘அழுகுரல்’ இப்போ கேட்கல.. ‘கடவுளே’ குழந்தைக்கு என்ன ஆச்சு..? களத்தில் இறங்கிய ராணுவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்கும் முயற்சியில் மீட்புப் படையினருடன் ராணுவமும் இணைந்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் நிவாடி மாவட்டம் பாராபுஜுர்க் கிராமத்தில் 200 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் 5 வயது சிறுவன் நேற்று தவறி விழுந்த சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப்படையினர் சிறுவனை மீட்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர், காவல்துறை எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்புப் பணியை தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.

இந்த மீட்புப் பணியில் தீயணைப்புத் துறையினர், ஆழ்துளைக் கிணறு தொடர்பான வல்லுநர்கள் என பலரும் சிறுவனை மீட்க முயன்று வருகின்றனர். தற்போது மீட்புப் பணியில் மாநில பேரிடர் மீட்புப் படையினருடன் இந்திய ராணுவத்தினரும் கைகோர்த்துள்ளனர்.

சிறுவன் விழுந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகே பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. மேலும் சிறுவனுக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் எத்தனை அடியில் சிறுவன் சிக்கியுள்ளான் என்று தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடைசியாக காலை 10 மணிக்கு சிறுவனின் அழுகுரல் கேட்டுள்ளது. அதன்பின்னர் சிறுவனிடம் இருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சிறுவன் நேற்று காலை தவறி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளான். முன்னதாக ஆழ்துளைக் கிணற்றில் பைப் போடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்துள்ளனர். அதற்குள் இப்படியொரு விபரீதம் நிகழ்ந்துள்ளது’ என தனது வேதனையை அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வருத்தத்தை தெரிவித்த மத்தியப் பிரதேச முதல்வர், ‘சிறுவனை மீட்க மாநில அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். விரைவில் சிறுவன் பத்திரமாக மீட்கப்படுவான். சிறுவனுக்கு கடவுள் நீண்ட ஆயுளைத் தர வேண்டும். அனைவரும் சிறுவனுக்காக பிரார்த்தனை செய்வோம்’ என அவர் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்