நெனச்சாலே நெஞ்சு ‘பதறுது’.. 200 அடி ‘ஆழ்துளைக் கிணற்றில்’ விழுந்த 3 வயது குழந்தை.. 100 அடி ஆழத்துக்கு தண்ணீர் வேற இருக்குதாம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆழ்துளைக் கிணற்றில் 3 வயது சிறுவன் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாய தேவைக்காக ஆழ்துளைக் கிணறுகள் போடப்படுகின்றன. அவற்றில் தண்ணீர் கிடைத்து விட்டால், பம்பு செட் போட்டு உரிய ஏற்பாடுகளைச் செய்து விடுகின்றனர். ஆனால் தண்ணீர் கிடைக்கவில்லை என்றால், பலரும் ஆழ்துளைக் கிணறை மூடாமல் அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால் குழந்தைகள் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவம் நாட்டின் பல பகுதிகளில் அரங்கேறி வருகின்றன.

தமிழகத்தில் திருச்சியை சேர்ந்த சிறுவன் சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் நடந்து ஓராண்டு முடிந்து சில நாட்களே ஆகின்றன. இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் நிவாடி மாவட்டத்தில் உள்ள பாராபுஜுர்க் கிராமத்தில் 3 வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரிகிஷன் குஸ்வாஹா என்பவரின் மகன் பிரகலாத், அருகில் உள்ள விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளான். அப்போது அங்கு சமீபத்தில் தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணறு ஒன்று அப்படியே திறந்து கிடந்துள்ளது. இதை சரியாக கவனிக்காத சிறுவன் திடீரென ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்துள்ளான்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் உடனே போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப்படையினர் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 200 அடி ஆழ்துளைக் கிணற்றில் 100 அடி ஆழம் வரை தண்ணீர் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனால் சிறுவன் எத்தனை அடி ஆழத்தில் இருக்கிறான் என்று தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் ஆழ்துளைக் கிணறு தொடர்பான வல்லுநர்களும் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்