'ஊரெல்லாம் தேடிய பெற்றோர்'... 'மூச்சுப் பேச்சில்லாமல் காருக்குள் கிடந்த 3 சிறுமிகள்'... 'காருக்குள் இருந்த தடயங்கள்'... நெஞ்சை நொறுக்கும் சோகம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

3 சிறுமிகளைக் காணவில்லை என அவர்களது பெற்றோர் பல இடங்களில் தேடிய நிலையில், 3 சிறுமிகளும் காருக்குள் இறந்து கிடந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ரெமல்லே கிராமத்தைச் சேர்ந்த 3 சிறுமிகளை திடீரென காணவில்லை. இதனால் பதறிய பெற்றோர் 3 சிறுமிகளையும் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார்கள். ஆனால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. குழந்தைகளுக்கு என்ன ஆனதோ எனப் பதறிய பெற்றோர், 3 சிறுமிகளும் விளையாடிக் கொண்டிருந்த இடத்திற்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த சிவப்பு நிற காருக்குள் எதேச்சையாகச் சென்று பார்த்தார்கள். அப்போது அஸ்பனா, யாஸ்மின் மற்றும் பர்வீன் ஆகிய மூன்று சிறுமிகளும் காருக்குள் நினைவிழந்த நிலையில் கிடந்தார்கள்.

இதையடுத்து சம்பவம் குறித்து காவல்துறைக்கு அவர்கள் தகவல் தெரிவித்த நிலையில், அங்கு விரைந்து வந்த போலீசார், காருக்குள் உயிரிழந்த நிலையில் கிடந்த 3 சிறுமிகளையும் சடலமாக மீட்டர்கள். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளான அவர்களுக்கு 6 முதல் 8 வயது வரை இருக்கும் என போலீசார் தெரிவித்தார்கள். 3 சிறுமிகளும் எப்படி உயிரிழந்தார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ''வெளியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகள் மூவரும், அங்கு நின்றுகொண்டிருந்த காருக்குள் சென்று அமர்ந்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து காரின் கதவுகள் தானாகவே மூடிக்கொண்டன. பின்னர் சுவாசிக்கச் சிரமப்பட்டு மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளனர். கடைசி நேரத்தில் கதவுகளைத் திறக்க சிறுமிகள் போராடிய தடயங்களும் உள்ளதாக'' போலீசார் கூறியுள்ளார்கள். இதனிடையே காரின் உரிமையாளரிடம் நடத்திய விசாரணையில் அவர் காரின் கதவை மூடவில்லை எனக் கூறியுள்ளார். மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பரிதாபமாக உயிரிழந்த சிறுமிகளின் உடலைப் பார்த்து அவர்களது பெற்றோர் கதறி அழுதார்கள்.

குழந்தைகள் வெளியில் விளையாடும் போது பெற்றோர் அவர்கள் மீது கவனமாக இருக்க வேண்டும் என போலீசார்  கூறியுள்ளார்கள். மேலும் வெளியில் வாகனங்களை நிறுத்தி விட்டுச் செல்வோர், தங்களது வாகனத்தின் கதவுகள் சரியாக மூடப்பட்டுள்ளதாக என்பதைச் சோதனை செய்து விட்டுச் செல்வது அவசியம் எனவும் கூறியுள்ளார்கள்.  இந்த சம்பவம் அந்த பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்