'கொரோனா தடுப்பூசி'... 'சுதந்திர தின விழாவில் நாட்டு மக்களுக்குப் பிரதமர் சொன்ன செய்தி'.... எதிர்பார்ப்பில் மக்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியச் சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெற்றது. டெல்லி செங்கோட்டைக்கு வருவதற்கு முன்பாக டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  பின்னர் செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமர் மோடி முப்படை வீரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.  இதைத்தொடர்ந்து, தேசியக்கொடியைப் பிரதமர் மோடி ஏற்றினார். 

7-வது முறையாகத் தேசியக்கொடியை ஏற்றும் பிரதமர் மோடி, வழக்கம் போலத் தலைப்பாகை அணிந்தபடி  சுதந்திர தின விழாவில் பங்கேற்றார். வழக்கமாகச் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டு, கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, ''கொரோனாவுக்கு எதிராகப் போராடும் முன்களப் பணியாளர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அவர்களை எப்போதும் நாம் நினைவு கொள்ள வேண்டும். தற்போதுள்ள நிலையில் இந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகள் சோதனை நிலையில் உள்ளன. இந்த தடுப்பூசிகளுக்கு விஞ்ஞானிகள் அனுமதி கொடுத்தவுடன் நாட்டில் மிகப்பெரிய அளவில் இந்த தடுப்பூசிகள் தயாரிக்கப்படும். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்'' எனப் பிரதமர் கூறியுள்ளார். இதனிடையே 3 கொரோனா தடுப்பூசிகள் சோதனையில் இருப்பதாகப் பிரதமர் கூறியுள்ளது நாட்டு மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்