‘இது எங்களுக்கு கௌரவம்’.. இந்திய ஒலிம்பிக் வின்னர்ஸ் எல்லாருக்கும் ‘சூப்பர்’ சலுகை.. ஏர்லைன்ஸ் நிறுவனம் அசத்தல் அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள், வீராங்கனைகளுக்கு விமான சேவை நிறுவனங்கள் அசத்தல் சலுகையை அறிவித்துள்ளன.

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை பெற்று பதக்கப்பட்டியலில் இந்தியா 48-வது இடத்தை பெற்றது. ஈட்டி எறிதலில் 23 வயது இளம் வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார். இதன்மூலம் 120 ஆண்டுகளுக்கு பின் தடகளத்தில் தங்கப்பதக்கம் வென்று இந்தியா வரலாறு படைத்தது.

ஆண்கள் மல்யுத்தப் போட்டியில் (57கிலோ எடைபிரிவு) ரவிக்குமார் தாஹியாவும், மகளிர் பளு தூக்குதலில் (49 கிலோ எடை பிரிவு) மீராபாய் சானுவும் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளனர். பேட்மிண்டனில் பி.வி.சிந்து, குத்துச்சண்டையில் லவ்லினா பர்கொஹெயின், மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா மற்றும் ஆண்கள் ஹாக்கியில் வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

இந்த நிலையில் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற வீரர்களுக்கு இலவச விமான சேவை அளிப்பதாக Go First மற்றும் Star Air ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதில் GoAir என முன்பு அறியப்பட்ட Go First விமான நிறுவனம், ஒலிம்பிக்கில் வென்ற இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச டிக்கெட்களை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

அதேபோல் உள்ளூர் விமான சேவை நிறுவனமான Star Air, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வாழ்நாள் முழுதும் தங்களின் விமானங்களில் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவித்துள்ளது. ஆண்கள் ஹாக்கி அணியில் விளையாடிய அனைத்து வீரர்களுமே இந்த இலவச சேவையின் கீழ் பயன்பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு இலவச பயண சேவை அளிப்பது தங்களுக்கு கௌரவமாக உள்ளதாக Star Air நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அதேபோல் இண்டிகோ நிறுவனம் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, அடுத்த ஆண்டு வரை தங்களது விமானங்களில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்