'கடன் சுமையில் வோடஃபோன் - ஐடியா'... 'எங்களுக்கு வேற வழி தெரியல'...'27 கோடி வாடிக்கையாளர்களின் கதி என்ன'?
முகப்பு > செய்திகள் > வணிகம்வோடஃபோன் - ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு 27 கோடி வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் உள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் - ஐடியா திவாலாகும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், அதற்கு ரூ.1.8 லட்சம் கோடி கடன் சுமை ஏற்பட்டுள்ளதோடு அதனை அடைக்க முடியாத சூழ்நிலைக்கு அந்த நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் 26 சதவிகிதம் உரிமையாளராக உள்ள குமார் மங்கலம் பிர்லா "எனது பங்குகளை நான் இலவசமாக அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் - எம்டிஎன்எல் வசம் கொடுத்து விடுகிறேன். அரசே வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தை எடுத்து நடத்த வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார். அதேபோலவே வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தில் 45 சதவிகிதம் உரிமையைத் தன்வசம் வைத்திருக்கும் பிரிட்டன் நாட்டின் வோடஃபோன் நிறுவனம் தனது பங்குகளையும் இலவசமாகக் கொடுக்க தயாராக இருக்கிறது.
கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், இத்தகைய நிலைப்பாட்டை வோடஃபோன் நிறுவனம் எடுத்திருப்பதாக வங்கி அதிகாரிகள் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். வோடஃபோன் - ஐடியா நிறுவனத்திடம் தற்போது ரூ.350 கோடி ரொக்கம் மட்டுமே கையிருப்பில் உள்ள நிலையில், தற்போதைய நிலையில் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் உரிமையாளர்கள் இருப்பதாகவும் அரசுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வோடஃபோன் - ஐடியா நிறுவனம் மத்திய அரசுக்கு மட்டுமே ரூ.1.5 லட்சம் கோடிக்கு மேல் ரொக்கம் செலுத்த வேண்டியுள்ளது. இதைத் தவிர வங்கிகளிடமிருந்து பெறப்பட்டுள்ள ரூ.23,000 கோடி கடனுக்கான வட்டியோ அல்லது அசலையோ திரும்பச் செலுத்தவும் வழி தெரியாமல் அந்த நிறுவனம் திணறிக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையே வோடஃபோன் - ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு 27 கோடி வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் உள்ளனர் என்பதும், அந்த நிறுவனம் திவாலானால் கிட்டத்தட்ட 10,000-க்கும் மேற்பட்டோர் வேலை இழப்பார்கள் என்பதும் என்பதும் பெரும் கவலைக்குரியதாக உள்ளது.
மற்ற செய்திகள்