‘ரொம்ப நாளா நடந்த பேச்சுவார்த்தை’!.. பிரபல நிறுவனத்தின் பங்குகளை ‘பெரும் தொகை’-க்கு கைப்பற்றிய ரிலையன்ஸ்..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம், லோக்கல் சர்ச் இன்ஜின் நிறுவனமான ஜஸ்ட் டயல் நிறுவனத்துடன் பல கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, தனது ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தை விரிவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் வர்த்தகத்தை வலிமைப்படுத்தும் விதமாக லோக்கல் சர்ச் இன்ஜின் மற்றும் விற்பனையாளர்கள் டேட்டாபேஸ் நிறுவனமான ஜஸ்ட் டயல் (Just Dial) நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.

கடந்த சில நாட்களாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஜஸ்ட் டயல் நிறுவனங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், தற்போது இரு நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் உறுதியாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கீழ் இருக்கும் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் லிமிடெட் நிறுவனம், ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் 66.95 சதவீத பங்குகளை ரூ.3497 கோடிக்கு கைப்பற்றியுள்ளது.

ரிலையன்ஸ் ரீடைல் ஒப்பந்தம் செய்துள்ள 66.95 சதவீத பங்குகளில், 40.95 சதவீத பங்குகளை உடனடியாகக் கைப்பற்றுவதாகவும், மீதமுள்ள 26 சதவீத பங்குகளை நிறுவன கைப்பற்றல் விதிகளின் கீழ் செபி ஒப்புதல் அளிப்பதன் பெயரில் வாங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி முதற்கட்டமாக, 25.33 சதவீத பங்குகளை ஜஸ்ட் டயல் நிறுவனத்திடமிருந்து நேரடியாக ரூ. 1022.25 கோடிக்கும், 15.62% பங்குகளை ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் தலைவர் வி.எஸ்.எஸ் மணி கட்டுப்பாட்டில் இருக்கும் பங்குகளை ரூ. 1020 கோடிக்கு ரிலையன்ஸ் ரீடைல் வாங்குகிறது. இந்தப் பங்கு கைப்பற்றலுக்கு பின்பும் வி.எஸ்.எஸ் மணி ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் சிஇஓ-வாக தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்