‘10,000 பேருக்கு வேலை’.. முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே.. தமிழ்நாட்டில் உள்ள ‘பிரபல’ கம்பெனி அட்டகாச அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

முழுக்க முழுக்க பெண்களால் செயல்படும் புதிய தொழிற்சாலையை உருவாக்கும் முனைப்பில் ஓலா நிறுவனம் இறங்கியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஓலா நிறுவனம் மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு ஆலையை அமைத்து வருகிறது. முதற்கட்டமாக 10 லட்சம் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் வகையில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து அடுத்த ஆண்டுகளில் இது 20 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது. கட்டமைப்பு முழுமையாக முடிவடைந்ததும், ஆண்டுக்கு 1 கோடி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிக்கும் மிகப்பெரிய ஆலையாக விளங்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஓலா நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் 10 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறிய அவர், ‘பெண்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும் என்ற நோக்கில் இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளோம். பெண்களுக்கு பொருளாதார வாய்ப்பை வழங்குவது என்பது, அவர்களை மட்டுமல்லாமல், அவர்களது குடும்பத்தையும், சமூகத்தையும் மேம்படுத்தும்.

வாகனங்கள் தயாரிப்பு குறித்து பெண்களுக்கு பயிற்சி வழங்க பெரிய அளவில் முதலீடு செய்துள்ளோம். தயாரிப்பு முழுமையும் அவர்களது பொறுப்பில் தான் நடைபெற உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் ஒவ்வொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் பெண்களின் உழைப்பு இருக்கும்’ என பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

உலகிலேயே முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் முதல் தயாரிப்பு ஆலையாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், ஓலா நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்