50 லட்சம் பேர் வேலை இழப்பு.. பணமதிப்பிழப்பு காரணமா?.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின், 50 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக வெளியிடப்பட்ட ஆய்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு, நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என அறிவித்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி கொண்டுவந்தார். கறுப்புபணம், ஊழல், கள்ளநோட்டு ஆகியவற்றை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கையை எடுத்ததாக பிரமதர் மோடி தெரிவித்தார். 

இந்நிலையில், பெங்களூரில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் 'ஸ்டேட் ஆப் ஒர்க்கிங் இந்தியா' என்ற தலைப்பில் ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வாளர்கள், இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தில்(சி.எம்.ஐ.இ.) இருந்து தரவுகளைப் பெற்று, இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிற்பகுதியில் இருந்தே வேலையின்மை அளவு படிப்படியாக அதிகரித்து, பணமதிப்பிழப்புக்குபின் 2018-ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 6 சதவீதமாக உயர்ந்துவிட்டது.

இதுகுறித்து 'ஸ்டேட் ஆப் வொர்க்கிங் இந்தியா' அறிக்கையை தயாரித்த அமித் பசோல் கூறுகையில், 'பணமதிப்பிழப்புக்குப் பின் வேலைவாய்ப்பில் புயல்போன்ற பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள், படித்துமுடித்து கனவுகளுடன் வரும் இளைஞர்கள் ஒருபுறம் அதிகரித்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு வேலைதரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்கள் உருக்குலைந்து போய்விட்டன.  தனியார் நிறுவனங்களுக்கும், வேலைவாய்ப்புக்கும் இடையிலான தொடர்பும் பலவீனமடைந்து வேலை உருவாக்கும் சக்தியை இழந்துவிட்டன' என்று தெரிவித்தார்.

'இதற்கு காரணம், பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி போன்றவைதான். பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டில் அமல்படுத்தப்பட்டபின், நாட்டில் வேலைவாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, அதன்பின் முழுமையாக சீரான, இயல்பு நிலைக்கு வரவில்லை. ஏறக்குறைய பணமதிப்பிழப்புக்குப்பின் 50 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்' எனத் தெரிவித்தார்.

இந்த அறிக்கையில், குறிப்பாக, கிராமப்புறங்களில் 20 வயது முதல் 24 வயதுடைய பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள், 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படித்து 35 வயதுக்கு கீழ்பட்ட நிலையில் உள்ள இளைஞர்கள் இடையேதான் வேலையின்மை அதிகரித்துள்ளது. நாடுமுழுவதும் அதிக அளவில் நன்கு படித்தவர்கள், இளைஞர்கள் இடையேதான் வேலையின்மை அதிகரித்துள்ளது. அதிலும் பெண்கள் மிகமோசமாக வேலையிழப்பை சந்தித்துள்ளனர். குறிப்பாக அமைப்பு சாரா தொழில்கள் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தேசிய புள்ளியியல் ஆணையத்தில் இருந்து பி.சி. மோகனன் பதவிவிலகினார். கடந்த 2017-18-ம் ஆண்டுக்கான வேலையின்மை குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடுவதற்கு மத்திய அரசு அனுமதிமறுக்கிறது என்பதாக குற்றம்சாட்டி அவர் பதவிவிலகினார். மேலும், பிஎல்எப்எஸ் (Centre’s Periodic Labour Force Survey (PLFS) ) அறிக்கையின்படி, நாட்டில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை நிலவுகிறது என்று கசிந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அப்போது பி.சி.மோகனன் கூறுகையில், 'கிராமபுற வேலையின்மை என்பது சிறிய வயதுள்ள அதாவது 15 முதல் 29 வயதுள்ள பிரிவினரிடையேதான் 80 சதவீதம் இருக்கிறது. நகர்புறங்களில் இது 77 சதவீதமாக இருக்கிறது. சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு முடித்து வெளியேறும் இளைஞர்களிடையேதான் வேலையின்மை கடுமையாக அதிகரித்துள்ளது' எனத் தெரிவித்தார்.

DEMONETISATION, JOBS, YOUTH, RESEARCH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்