சீனாவில் உள்ள சாங்ஷி மாகாணத்தில் வசிக்கும் 21 வயது இளம்பெண் ஒருவர் பாரம்பரிய 'வொய்ன்' தயாரிப்பதற்காக ஆன்லைனில் கட்டுவிரியன் பாம்பு ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் மருத்துவகுணம் மிகுந்த 'வொய்ன்' தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட அவரை கடும் விஷத்தன்மை மிகுந்த அந்த பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. அந்த பாம்பு கடித்து எட்டு நாட்களுக்குப் பின் கடந்த செவ்வாய்க்கிழமை அவர் இறந்ததாகத் தெரிகிறது.
அந்த பாம்பை அவர் சுவான்சுவான் என்னும் இணைய வணிக நிறுவனத்தில் ஆர்டர் செய்ததாக கூறப்படுகிறது. கட்டு விரியன்கள் அதிகம் காணப்படும் குவாங்டோங் என்னும் மாகாணத்திலிருந்து அந்த பாம்பு வாங்கப்பட்டது என செய்திகள் கூறுகின்றன.
இந்த வகை பாம்புகளை மதுவில் முழுவதும் உட்செலுத்தி பாரம்பரிய 'வொய்ன்' தயாரிப்பதாக கூறப்படுகிறது. அந்த பெண்ணைக் கடித்து விட்டு மாயமான அந்த பாம்பை அவரது வீட்டிற்கு அருகே கண்டுபிடித்ததாக வன அலுவலர்கள் தெரிவித்தனர்.