அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா மாகாணத்தில் வசிக்கும் ஒருவர் கழிவறையில் 'டாய்லெட்' தொட்டிக்குள் மலைப்பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கடந்த வியாழன் அன்று இரவு 'டாய்லெட்' தொட்டிக்குள் பாம்பு ஒன்று தலையை நீட்டிக்கொண்டு இருப்பதைப் பார்த்த அவர் முதலில் அதை விளையாட்டு என்று நினைத்தார்.
பின்பு அதன் வாயில் இருந்து நீண்ட நாக்கைக் கணடவுடன் அதிர்ச்சியடைந்ததாகக் கூறும் ஜேம்ஸ் ஹூப்பர் இதற்கு முன் வீட்டு முற்றப்பகுதிகளில் பாம்புகளைக் கண்டிருப்பதாகவும் ஆனால் டாய்லெட்டில் பாம்பைப் பார்ப்பது இதுவே முதல் முறை எனவும் தெரிவித்தார்.
தன் உடன் வசிப்பவரான கென்னி ஸ்ப்ரூயில் என்பவரை அழைத்த ஜேம்ஸ் ஒரு வலைக்கயிற்றை மீன்பிடி தூண்டிலுடன் இணைத்து அதன் மூலமாக பாம்பைப்பிடித்து வாளியில் போட்டதாக கூறுகிறார். பின்பு விலங்குகள் துறை அலுவலரை அழைத்த அவர், பிடிக்கும் போது பாம்பு எந்த விதத்திலும் துன்புறுத்தப்படவில்லை என தன் முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.