கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் மூன்று வகையான யோகாசனம் செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் முயற்சியில் ஈடுபட்டார். பார்க் குளோபல் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியான வைஷ்ணவி நீண்ட நேர தாடை நிலைப்பாடு யோகாவை 7 நிமிடம் தொடர்ந்து செய்து இதற்கு முந்தைய சாதனையான 2 நிமிடத்தை முறியடித்தார். அதேபோல் முறுக்கிய மார்பு நிலையில் பாதத்தை பயன்படுத்தி வெறும் 18.28 வினாடிகளில் ஆறு முட்டைகளை கோப்பையில் போட்டார். இந்த யோகாசனத்தில் இதற்கு முந்தைய சாதனை 21.52 வினாடிகளாக இருந்தது. உடலை முறுக்கிய நிலையில் 20 மீட்டர் தூரத்தை 13.8 வினாடிகளில் கடந்த அவர் இதற்கு முந்தைய சாதனையான 15.54 வினாடிகளை முறியடித்தார்.
இந்த முயற்சி குறித்து பேசிய மாணவி வைஷ்ணவி, "கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டி நான் கடந்த 10 நாட்களாக கடுமையாக பயிற்சி மேற்கொண்டேன். திருப்பூரில் சுவாமி விவேகானந்தா யோகா தியரி மற்றும் தெரபி பள்ளி ஆசிரியர்கள் திரு எஸ். ராமு மற்றும் திரு. எஸ் லட்சுமணன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நான் தினமும் காலை, இரவு பயிற்சி செய்தேன். இந்த முயற்சியில் நான் சாதிப்பேன் என்று உறுதியாக உள்ளேன்," என்றார். ஒன்பது வயதில் இருந்து யோகா கற்றுக் கொள்வதாக கூறும் வைஷ்ணவி, தான் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளதாகவும் கூறினார்.
இது குறித்து பார்க் கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர். ஆர். அனுஷா கூறுகையில், “பார்க் கல்வி குழுமத்தில் நாங்கள் எங்கள் குழந்தைகளை திறமைகளுடன் அடையாளம் கண்டு ஆதரிக்கிறோம். அதனால் அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடத்திட்டம் சாரா செயல்களிலும் சிறந்து விளங்குகிறார்கள். செல்வி எஸ். வைஷ்ணவி மற்றும் அவரது சகோதரியின் கல்விக்கு ஆதரவளிப்பது மற்றும் அவரது சர்வதேச போட்டிகளிலும் சிறிதளவு ஆதரவளிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அவர் எப்போதும் வெறும் கையுடன் திரும்பியதில்லை," என்றார்.
OTHER NEWS SHOTS