2018-க்கான சாகித்ய அகாடமி விருது பெறுகிறது, தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘சஞ்சாரம்’ நாவல்!
Home > தமிழ் newsதமிழில் மிக முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவர் எஸ்.ராமகிருஷ்ணன். ரஜினி நடித்த பாபா, இயக்குநர் லிங்குசாமியின் இயக்கத்தில் வெளிவந்த பீமா, சண்டக்கோழி முதல் பாகம், இயக்குநர் பாலாவின் அவன்- இவன், மறைந்த இயக்குநர் ஜீவா-வின் உன்னாலே உன்னாலே, தாம்தூம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர் எஸ்.ராமகிருஷ்ணன்.
எறக்குறைய 25 ஆண்டுகளாக எழுத்துலகில் முழு நேரமாக பயணிக்கும் எஸ்.ராமகிருஷ்ணன் தேசாந்திரி என்கிற பதிப்பகத்தை நடத்தி வருவதோடு, இலக்கியம், கலை, இந்திய நிலம், கலாச்சாரம், பண்பாட்டு வாழ்க்கை என இன்னும் பலவற்றை பற்றிய 125 நூல்களையும் கதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அழிந்து வரும் தமிழரது உணவு முறைகளையும் சர்வதேச உணவு அரசியலையும் பற்றிய இவரது ‘உணவு யுத்தம்’ எனும் புத்தகமும், தொடர்ந்து விகடனில் தொடராக இவர் எழுதிய ‘இந்திய வானம்’ எனும் நூலும் பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்த நிலையில் இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான சாகித்ய அகாடமி விருது, எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 'சஞ்சாரம்' என்ற நூலுக்கு இந்த ஆண்டு (2018) வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான இந்த நாவலை எழுத ஒன்றரை வருடம் எடுத்துக்கொண்டதாக பேட்டி அளித்துள்ள எஸ்.ராமகிருஷ்ணன், இந்த நாவலில் கரிசல் நிலத்தில் வாழும் நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்களின் வாழ்க்கை போராட்டத்தை சித்தரித்து எழுதியுள்ளார்.