'யூடியூப் பிரசவ எதிரொலி'..ஹீலர் பாஸ்கர் கைது!
Home > தமிழ் newsதற்போதெல்லாம் தக்காளி சாதம் வைப்பதில் தொடங்கி ஜடை பின்னுவது வரைக்கும் எல்லாவற்றையும் யூடியூபிலேயே பார்த்து கற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். ஆனாலும் நிபுணத்துவம் வாய்ந்த உடல், மருத்துவம் சார்ந்த விஷயங்களுக்கு சரியான வல்லுநர்களை அணுகுவதே பாதுகாப்பான ஒன்று.
இந்த உண்மையை புரிந்துகொள்ளாமல் இரண்டு நாட்களுக்கு முன்னர் கார்த்திகேயன் என்பவர் திருப்பூரில் யூடியூபைப் பார்த்து தன் மனைவிக்கு பிரசவம் பார்த்ததால் குழந்தையுடன், தாயும் இறந்த சம்பவம் தமிழகத்தில், குறிப்பாக பெண்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவரை கைது செய்த காவல் துறையினர் இதுபோன்ற விபரீதங்களில் ஈடுபடுதல் குற்றம் எனவும் எச்சரிக்கைவிடுத்தனர். இதனைத் தொடர்ந்து, கோவையில் நடைபெறவிருந்த ஹீலர் பாஸ்கரின் மையத்தில் நடக்கவிருந்த சுகப்பிரசவ பயிற்சி முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அலோபதியை பின் தொடராமல், தொடுசிகிச்சை மற்றும் சித்த மருத்துவங்கள் மூலம் மருத்துவம் செய்து வருபவர் ஹீலர் பாஸ்கர். கோவை குனியமுத்தூரில் உள்ள இவரது நிஷ்டை எனும் மருத்துவ மையத்தில் சுகப்பிரவசத்துக்கான பயிற்சி முகாமை ஹீலர் பாஸ்கர் இன்று நடத்த திட்டமிட்டிருந்தார்.
ஆனால் மாவட்ட நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி பானுமதி, காவலர்களுடன் விரைந்து சென்று நடக்கவிருந்த பயிற்சி முகாமை நிறுத்தி ஹீலர் பாஸ்கரை கைது செய்துள்ளார்.
சுகாதாரக் கட்டுப்பாடுகள் மற்றும் மக்களிடையே பரவும் தவறான புரிதல்களால் ’திருப்பூர் பிரசவம்’ போன்ற விபரீதங்கள் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக தான் இவ்வாறு செய்ததாக இதுகுறித்து பானுமதி தெரிவித்துள்ளார்.