யார் இந்த சோபியா? பின்னணியும்.. ’பிஜேபி’ விமர்சன வழக்கும்!

Home > தமிழ் news
By |
யார் இந்த சோபியா? பின்னணியும்.. ’பிஜேபி’ விமர்சன வழக்கும்!

பாஜகவை ட்விட்டரில் விமர்சித்ததாக கூறப்படும்,  சோபியா தமிழிசை சவுந்தர்ராஜனின் புகாரின்பேரில் முதலில் கைது செய்யப்பட்டு பின்னர் தூத்துக்குடி நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து சமூக வலைதளங்களில் சோபியா யார்? என்ன செய்கிறார் என்று பெரிய விவாதமே நிகழ்ந்து வருகிறது. கனடாவில் மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தில் கணிதத் துறையில் ஆய்வியல் படிப்பு படித்து வரும் சோபியா அடிப்படையில் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். சமூக ஆர்வலரான இவரின் விரிவான பேட்டி ’தி போலிஸ் ப்ராஜெக்ட்’ (The Polis Project) என்கிற இணையத்தில் இருக்கிறது.


தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றியும் அதன் அரசியல் பின்னணி குறித்தும் சமூக வலைதளப் பக்கத்தில் எழுதி வந்த சோபியா, திருமுருகன் காந்தியின் கைது நடவடிக்கைக்கு எதிராகவும்,   சேலம் மாணவி வளர்மதியின் கைதுக்கு எதிராகவும், ’கக்கூஸ்’ஆவணப்பட இயக்குநர் திவ்யா பாரதியின் இரண்டாவது ஆவணப்படமான ’ஒருத்தரும் வரலே’ படத்தின் தடைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து பதிவுகளை இட்டு வந்தார்.


இந்த நிலையில்தான், சென்னை-தூத்துக்குடி விமானத்தில்  ’பாசிச பா.ஜ.க. ஒழிக’ என கோஷமிட்ட சோபியாவின் மீது விமான நிலையத்தின் காவல்துறையினரிடம் தமிழிசை புகார் அளித்தார். இதனையடுத்து, நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னர், சட்டப்பிரிவு 505(1)(B), 290 மற்றும் 75 (M.C.P) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு, தூத்துக்குடி ஜே.எம்-3 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சோபியாவை, 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி தமிழ்ச்செல்வி உத்தரவிட்டார்.


இந்த நிலையில்தான் நெல்லை, கொக்கிரக்குளம் பெண்களுக்கான சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த  சோபியா உடல்நலக் குறைவால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உடல் சோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டார். இதனிடையே சோபியாவின் தந்தை கோரிய ஜாமீன் மனு இன்று காலை பரீசலிக்கப்பட்டு நீதிபதி தமிழ்ச்செல்வி, ஷோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.