ஒரு கால் இல்லை...உழைப்பு இருக்கிறது...வைரலாகும் கட்டிட தொழிலாளியின் நம்பிக்கை வீடியோ!
Home > தமிழ் newsராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கால் இல்லாத நிலையில் முதியவர் ஒருவர் கட்டிட தொழில் செய்துவரும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போதெல்லாம் எந்த ஒரு குறையும் இல்லாதவர்களே வாழ்க்கையை பற்றி ஆயிரம் குறைகளைக் கூறி கொண்டு வாழ்கிறார்கள்.ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கோபரா சிங்,ஒரு கால் இல்லாத நிலையிலும் கட்டிட தொழில் செய்து தனது குடும்பத்தை நடத்தி வருகிறார்.
தற்போது வேலைக்காக டெல்லியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.கால் இல்லாத இவர் கடினமான வேலை எல்லாம் இவர் செய்ய முடியாது எனப் பலரும் அவரை புறக்கணித்தனர். அப்போது இந்த உலகில் எதுவும் எளிதல்ல என்பதை புரிந்து கொண்ட கோபரா தனது வாழ்க்கையை தொடர்ந்து நடத்த போராட வேண்டும் என்று முடிவு செய்தார். இன்று ஒரு கட்டிட தொழிலாளியாக தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார் கோபரா சிங்.
கடின உழைப்பாளியான கோபரா சிங் அவரே மூட்டை மூட்டையாக சிமெண்ட் மூட்டைகளை தூக்குவது, அதை கலவைக்காக கலப்பது என்று பம்பரமாக சுழன்று அனைத்து வேலைகளையும் செய்கிறார்.எதற்கும் மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்காமல்,கால் இல்லை என்று சிறிதளவு கூட சோர்ந்து விடாமல் கடினமாக உழைக்கிறார்.இவரது உழைப்பை பார்த்து வியந்த வினோத் ஷோரி என்பவர் அதனை அப்படியே வீடியோவாக பதிவு செய்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தனது கடின உழைப்பால் கோபரா சிங் ஹீரோ ஆகிவிட்டார் என நெகிழ்ந்து வருகிறார்கள்.இதுவரை இவரது வீடியோவை 60 லட்சத்திற்கும் மேலானவர்கள் பார்வையிட்டுள்ளனர். 70 ஆயிரம் வரை ஷேர் செய்துள்ளனர்.யார் இந்த கோபரா சிங் அவருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என பல பேர் கேட்டுவருகிறார்கள்.
இந்நிலையில் எந்த வேலை செய்தலும் அதில் ஆயிரம் குறைகள் கூறி எப்போதும் வாழ்க்கையை வெறுப்புடன் வாழ்பவர்கள் கோபரா சிங் குறித்து ஒரு நிமிடம் சிந்தித்து பார்க்க வேண்டும். கோபரா சிங் பெரிய சாதனை எதுவும் செய்து விடவில்லை.அவர் தனது வேலையை செய்தார். அதை ஒழுங்காக செய்தார்.இதனால் பலபேருக்கு ஹீரோவாக மாறி இருக்கிறார்.