பொதுத் துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் மோசடி..மும்பை சிறையில் மல்லையாவிற்கு இவ்வளவு வசதிகளா !

Home > தமிழ் news
By |
பொதுத் துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் மோசடி..மும்பை சிறையில் மல்லையாவிற்கு இவ்வளவு வசதிகளா !

பொதுத்துறை வங்கிகளில் 9000 கோடி அளவிற்கு கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியான விஜய் மல்லையா தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.இந்நிலையில் அவரை இந்தியா  கொண்டுவர சிபிஐ பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. அவரை நாடு கடத்த லண்டன் நீதி மன்றத்தில் சிபிஐ வழக்கு தொடர்ந்து உள்ளது.

 

இந்நிலையில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட பிறகு, வழக்கு விசாரணையின் போதும், அவரை இந்திய நீதிமன்றங்கள் தண்டித்தாலும் மும்பை ஆர்தர் சாலையில் உள்ள மத்திய சிறையில் அவரை அடைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக எதிர்ப்புத் தெரிவித்த மல்லையா, அவர் அடைக்கப்படும் சிறை அறையில் சூரிய ஒளியே இருக்காது என்றும், சுகாதாரக் குறைவாக இருக்கும் என்றும் லண்டன் நீதிமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவித்தார்.

 

இதையடுத்து, இந்திய சிறைகள் சுகாதாரமாகவும், மருத்துவ வசதிகள் கொண்டதாகவும் இருக்கிறதா என்பதை அறிய லண்டன் நீதிமன்றம் விரும்பியது.அந்த சிறை அறையின் விடியோ பதிவை, இந்திய அதிகாரிகள் மூன்று வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என லண்டன் பெருநகர நீதிமன்றம் கடந்த மாதம் இறுதியில் உத்தரவிட்டுள்ளது.

 

முன்னதாக, இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றபோது, சிறையின் தரம் மற்றும் வசதிகள் தொடர்பாக ஆட்சேபத்துக்குரிய சில புகைப்படங்களை மல்லையா தரப்பினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அப்போது சிறை வளாகம் தூய்மையாகவும், சுகாதாரமானதாகவும் இருக்கும் எனவும், தனி கழிவறை, சலவை வசதிகள் போன்றவை உள்ளன என்றும் இந்திய அதிகாரிகள் தரப்பில் வாதிடப்பட்டது. தூய்மையான மெத்தை மற்றும் போர்வை வழங்கப்படும், மற்ற கைதிகளைப் போல சிறையில் உள்ள நூலகத்தை மல்லையா பயன்படுத்தலாம் என்றும் அவர்கள் கூறினர்.

 

இந்நிலையில், மும்பை சிறை தொடர்பான 8 நிமிட விடியோவை சிபிஐ அதிகாரிகள் லண்டன் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தனர். 8 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த விடியோ, சிறை அறை குறித்து அதிகாரிகள் கூறிய அத்தனை தகவல்களும் உண்மை என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது

 

மேலும்  அவர் மும்பை சிறையில் அடைக்கப்படும் பட்சத்தில் அவருடைய அறையில் தொலைக்காட்சிப் பெட்டி, தனியாக கழிவறை வசதி, துணி துவைக்க, குளியலறை, சூரிய வெளிச்சம் வருவதற்கான வசதி, நூலக வசதி, நடைபயிற்சி மேற்கொள்ள வராண்டா போன்ற வசதிகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

MUMBAI, CBI, VIJAY MALLYA