5 வயது சிறுவனின் நாக்கை வெட்டிய பெண் மீது பெற்றோர்கள் புகார்!
Home > தமிழ் newsவேலூர் மாவட்டத்தில் நில தகராறு காரணமாக, வஞ்சகம் கொண்டு, பெண் ஒருவர் 5 வயது பையனின் நாக்கை அறுத்துள்ள சம்பவமும், அந்த பெண் மீது புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
வேலூர் மாவட்டம் நாற்றாம்பள்ளியை அடுத்த பச்சூர் என்கிற ஊரில் விஜயராகவன் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு முதல் வகுப்பு படிக்கும் 5 வயது மதிக்கத்தக்க, திக்ஷாந்த் என்கிற மகன் இருக்கிறான். அதே பகுதியில் வசிக்கும் லட்சுமி என்கிற பெண்மணிக்கும் விஜயராகவனுக்கும் நில தகராறு இருந்ததும், இதனால் இவர்களிடையே பல இடங்களில் சண்டை மூளும் என்பதும் பலருக்கும் தெரிந்த வாடிக்கையான ஒன்றாக இருந்துள்ளது.
இந்த சூழலில்தான், விஜயராகவனின் சிறுவயது மகன் திக்ஷாந்த் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவனருகே வந்த லட்சுமி, விஜயராகவனின் மகனை யாரும் பார்க்காத இடத்துக்கு அழைத்துச் சென்று, நிலத்தகராறினால் விஜயராகவன் மீது இருந்த கோபத்துக்கு பழி தீர்த்துக் கொள்ளும் விதமாக, திக்ஷாந்தின் நாக்கை பலவந்தமாக அறுத்துள்ளார்.
இதனால் பலத்த காயமடைந்த 5 வயது திக்ஷாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். மேலும், இதுகுறித்து காவல்துறையினரிடத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என திக்ஷாந்தின் பெற்றோர் மனம் வெம்பியுள்ளனர்.