10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை:3 பேருக்கு தூக்கு...நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Home > தமிழ் newsதேனியை சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் 3 பேருக்கு மரண தண்டனை விதித்து தேனி மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஒரு கிணற்றில் சிறுமியின் உடல் மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 10 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர். அவளை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியதில், ஒன்றுக்கு மேற்பட்டோரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கொடூரம் தெரியவந்தது.
இதையடுத்து அதே ஊரைச் சேர்ந்த சுந்தர்ராஜ், ரோபின், குமரேசன் ஆகிய மூவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக வழக்கு தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.வழக்கு விசாரணையின் முடிவில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் மூவருக்கும் தூக்கு தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியின் தாயாருக்கு கருணைத் தொகை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.