ஏமாற்றிய மகன்கள்.. கலங்கிய பெற்றோர்கள்.. கலெக்டர் அதிரடி!

Home > தமிழ் news
By |
ஏமாற்றிய மகன்கள்.. கலங்கிய பெற்றோர்கள்.. கலெக்டர் அதிரடி!

மனதுக்கு பட்டதை நியாயம் என்று நேர்மையாக செய்து வரும் கலெக்டர்கள் எப்போதுமே மக்களின் இதயத்துக்கு நெருக்கமாவது உண்டு. அவ்வகையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியும் மக்களிடையே அண்மை காலமாகவே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். அவரின் சின்சியர் செயல்களுக்காக பலரும் அவரை புகழ்கின்றனர்.

 

அண்மையில் கந்தசாமி, தன்னிடம் வந்த வயதான தம்பதியர்க்கு அவர்களின் பிரச்சனையை கேட்டு எடுத்துள்ள முடிவு அதிரடியாக பேசப்பட்டு வருகிறது.  திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பென்னாத்தூர் அருகே, வேடநத்தம் என்கிற கிராமத்தில் வசித்து வரும் கண்ணன் - பூங்காவனம் என்கிற வயதான இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் மகன்கள்.

 

அரும்பாடு பட்டு அவர்களை வளர்த்து ஆளாக்கி, 7 ஏக்கர் நிலத்தை விற்று சொத்தினை சரிபாதியாக பிரித்துக்கொடுத்துள்ளனர். ஆண்மகன்களை பெற்றால் அவர்களே செல்வம் என நினைத்து தங்களுக்கென்று எதுவும் எடுத்துக்கொள்ளாமல் இருந்துவிட்டார்களோ என்னவோ தெரியவில்லை. பிற்காலத்தில் மகன்கள் அதே ஊரில் தனித்தனி குடித்தனமாக சென்று வாழத் தொடங்கியபின், தாய் தந்தையர் இருவரையும் சாப்டீங்களா என கேட்க கூட ஆளின்றி தவிக்கவிட்டுள்ளனர்.


இதனால் பெரும் அதிருப்தியும், விரக்தியும் அடைந்த கண்ணன் - பூங்கொடி தம்பதியர் இருவரும் வாழ வழியின்றி நிற்கதியாக நிற்பதாக திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமியிடம் சென்று விளக்கவாரியாக எல்லாவற்றையும் கூறியிருக்கின்றனர்.

 

இதனை கேட்டுவிட்டு, ஒரு  முடிவுக்கு வந்த கலெக்டர், இந்த தம்பதியர் தங்கள் மகன்களுக்கு கொடுத்த பத்திர பதிவை ரத்து செய்து பின், அவர்களின் பெயருக்கு மாற்றிக் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் சொந்த நிலத்தில் விவசாயம் செய்துகொள்ள கடன் உதவியும் வழங்கியுள்ளார்.

 

இனி  இந்த பெற்றோர்களாகவே பார்த்து தங்கள் மகன்களுக்கு ஏதேனும் கொடுத்தால்தான் உண்டு. பெற்றோர்களை மறந்த மக்களுக்கு இது தக்க பாடம் என்று பலரும் இச்சம்பவத்தை பற்றி பேசி வருவதோடு, கலெக்டரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

முன்னதாக பெற்றோரை இழந்து 2 தங்கையுடன் தவிக்கும் பெண்ணுக்கு பணிநியமன ஆணையை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

COLLECTOR, THIRUVANNAMALAI, PARENTS, SON, HELP, LESSON, INSPIRING