இயற்கை விவசாயத்தின் காதலன் நெல் ஜெயராமன் மறைவு!
Home > தமிழ் newsஇயற்கை விவசாயி நெல் ஜெயராமன் இன்று (டிச. 6) காலை காலமானார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயதான நெல்ஜெயராமன் சிகிச்சை பலனின்றி காலமானார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த, கட்டிமேடு கிராமத்தில், பிறந்த இவர், நம்மாழ்வாரிடம் இயற்கை விவசாயத்துக்கான பயிற்சி பெற்ற இளைஞர் குழுவில் முக்கியமானவர். இயற்கை விவசாயம் உள்ளிட்ட பல்வேறு வேளாண் பணிகளை மேற்கொண்டு வந்ததோடு, பாரம்பரிய நெல் விதைகளை காப்பாற்றியமைக்காக மத்திய, மாநில அரசுகளின் விருது பெற்றவர்.
பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகள் விளைவிக்க வேண்டும் என்கிற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல் ஜெயராமன் 150க்கும் மேற்பட்ட அரியவகை நெல் விதைகளை சேகரித்தார். 2006-ஆம் ஆண்டு தொடங்கி வருடாவருடம் புகழ்பெற்ற நெல் திருவிழாவை நடத்தியவர்.
கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதியுற்று வந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டிருந்தவர் இன்று ( டிச. 6) காலை 5.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குக்காக சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்.
முன்னதாக நடிகர்கள் சத்யராஜ், சிவகார்த்திகேயன், கார்த்தி உள்ளிட்டோர் மருத்துவமனை சென்று நலம் விசாரித்தனர். அவர்களில் சிலர் நெல் ஜெயராமனின் மருத்துவ செலவையும் ஏற்றனர். இதேபோல் தமிழக அரசு சார்பில் அமைச்சர் காமராஜ் உள்ளிட்டோர் சந்தித்து நெல் ஜெயராமனின் மருத்துவ செலவுக்கு உதவி செய்திருந்தனர்.