பெற்றோரை இழந்த குழந்தைகள்...பெற்றோர் ஸ்தானத்தில் உதவிய ஆட்சியர்...கண்கலங்க செய்யும் சம்பவம்!

Home > தமிழ் news
By |
பெற்றோரை இழந்த குழந்தைகள்...பெற்றோர் ஸ்தானத்தில் உதவிய ஆட்சியர்...கண்கலங்க செய்யும் சம்பவம்!

மாவட்ட ஆட்சியர்கள் நினைத்தால் மக்களின் குறைகள் ஏதுவாயினும் அதை நிவர்த்தி செய்ய முடியும் என, நிரூபித்திருக்கிறார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி.

 

திருவண்ணாமலை மாவட்டம்  ஆரணி பகுதியில் தனது  தாய் தந்தையை இழந்து நிர்க்கதியாய்,தம்பி தங்கைகளை காக்கவேண்டிய  நிலையில் இருந்த இளம்பெண்ணுக்கு அரசு வேலை வழங்கியதோடு  தம்பி தங்கைகளின் கல்விச்செலவுக்கும் உதவி செய்து,மதியம் அவர் வீட்டில் உணவுண்ட ஆட்சியர் கந்தசாமியின் செயல் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கனிகிலுப்பை கிராமத்தில் வசித்து வந்த வெங்கடேசன்-அனிதா தம்பதியருக்கு ஆனந்தி (19) என்ற மூத்த மகளும் மேலும் இரு குழந்தைகளும் இருந்தனர்.வெங்கடேசன் நெசவாளராக இருந்தார்.

  

வெங்கடேசன் நெசவாளராக இருந்த போதும் சொந்தமாக தொழில் செய்ய பண வசதி இல்லாததால் கூலித்தொழிலாளியாக வாழ்க்கை நடத்தி வந்தார். அவரது மனைவி சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வந்தார்.அவருடைய சொற்ப வருமானத்தில் தான் குடும்பத்தை நடத்தி வந்தார்கள்.இந்நிலையில் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட அனிதா 3 ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்தார்.

 

மனைவி இறந்த சோகம் தாங்காமல் மிகுந்த மன உளச்சலில் இருந்த வெங்கடேசன் கடந்த வருடம் திடீரென மரணமடைந்தார்.தாயும்,தந்தையும் திடீரென இறந்தது ஆனந்திக்கு பேரிடியாக அமைந்ததோடு குடும்பத்தின் மொத்த பாரமும் அவர் மீது விழுந்தது.அனிதாவின் பாட்டி அவர்களுக்கு ஆதரவாக இருந்து அவர்களை கவனித்துக்கொண்டார்.

 

கடுமையான வறுமையில் வாடிய போதும் ஆனந்தியும் அவரது தங்கையும் கூலி வேலை செய்து அவரது தம்பியை படிக்க வைத்து வருகிறார்கள்.அவர் தற்போது 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவாக இருந்த பாட்டி வயது மூப்பின் காரணமாக கடந்த மாதம் இறந்து போனார்.இதனால் தாங்கள் அனாதையாக்கப்பட்டதாக எண்ணி செய்வதறியாது திகைத்து நின்றார்கள்.

 

இந்நிலையில் ஆனந்தியின் ஊரை சேர்ந்த ஒருவர் உங்களின் குறைகளை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கொடுங்கள். அவர் நிச்சயம் நல்லது செய்வார் என கூறினார்.இதனையடுத்து தனது பிரச்சினைகளை  மனுவாக எழுதி கடந்த மாதம் 13-ம் தேதி மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு சென்ற ஆனந்தி, அழுதபடியே மனுவுடன் நின்றுள்ளார். இதைப்பார்த்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, அருகில் அழைத்து அவரது நிலையை கனிவுடன் கேட்டறிந்தார். தனது குடும்ப வறுமை, ஆதரவற்ற நிலையை ஆனந்தி கூற கட்டாயம் நான் நடவடிக்கை எடுக்கிறேன் என்று நம்பிக்கையுடன் ஆட்சியர் அனுப்பி வைத்தார்.

 

ஆனந்தி குடும்பத்தின் வறுமையை போக்குவதற்கு கண்டிப்பாக ஏதாவது செய்யவேண்டும் என எண்ணிய ஆட்சியர்,ஆனந்தியின் தாய் பார்த்த சத்துணவு அமைப்பாளர் வேலையை அவருக்கு வழங்க இயலுமா என அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.ஆனால் 21 வயது ஆனால்தான் வேலை வழங்க இயலும் என அரசாணை இருப்பதாக தெரிவித்தார்கள்.

 

இருப்பினும் சோர்ந்து போகாத ஆட்சியர் தலைமைச் செயலாளருக்கு ஆனந்தியின் குடும்ப நிலைமை குறித்து விரிவாக கடிதம் எழுதி அரசிடம் இருந்து விதிவிலக்கு பெற்றார்.இதனால் கருணை அடிப்படையில் ஆனந்திக்கு சத்துணவு அமைப்பாளர் வேலையை வழங்க அரசிடம் இருந்து அனுமதியை பெற்றதோடு அதன் ஆணையை உடனே தயார் செய்து தானே நேரடியாக கொண்டு ஆனந்தியிடம் கொடுக்க முடிவு செய்தார்.

 

மேலும் ஆனந்தியின் வீட்டிற்கு நேரில் சென்ற ஆட்சியர் அவரிடம் நேரடியாக அரசாணையை வழங்கினார்.இதை சற்றும் எதிர்பாராத ஆனந்தியும் அவரது தம்பி தங்கையம் கதறி அழுதார்கள்.அவர்களை தேற்றிய ஆட்சியர் அவர்களுக்கு வேறு ஏதேனும் உதவிகள் வேண்டுமா என்று கேட்க அவர் தமிழ் இளங்கலை படிக்கவேண்டும் என சொல்ல தொலைதூர கல்வி மூலம் பயில மூன்று ஆண்டுகளுக்கான செலவுத் தொகையை ஏற்றுக்கொண்டார் ஆட்சியர் கந்தசாமி. மேலும் ஆனந்தியின் தங்கை பிஎஸ்சி பயோ வேதியியல் மூன்று ஆண்டுகளுக்கு தனியார் கல்லூரியில் பயில ஏற்பாடு செய்து அதற்கான கட்டணம் இல்லாமல் படிக்க வைக்க பரிந்துரைத்தார்.

 

மேலும் "நான் உங்களோடு தான் உணவு உண்ண போகிறேன்" என்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.ஆனால் ஆட்சியர் உணவு உண்பதற்கு உணவு ஒன்றும் இல்லையே என்று எண்ணிய ஆனந்தியிடம் கவலைப்பட வேண்டாம் நான் உணவை ஏற்பாடு செய்து விட்டேன் என்று தனது செலவிலேயே உணவை வரவைத்து அவர்களுடன் தரையில் அமர்ந்து உணவை அருந்தினார். மேலும் அவர்களின் வீடு கடுமையாக பாதிப்படைந்திருப்பதை கண்ட ஆட்சியர் தமிழ்நாடு அரசின் பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஆனந்தி வீட்டை கட்டித்தரும் கட்டுமான பணிக்கான ஆணையை வழங்கி தொடங்கி வைத்தார்.

 

இதுவும் சாதாரண மனு என்று எண்ணி விடாமல் தாயையும், தந்தையையும் இழந்து அனாதையாக நிற்கும் இரண்டு பெண் குழந்தைகளுக்கும்,அந்த சிறுவனுக்கும் பெற்றோரின் ஸ்தானத்தில் இருந்து உதவி செய்த ஆட்சியர் கந்தசாமியின் செயல் அங்கிருந்த அனைவரையும் கண் கலங்க செய்தது.

 

ஐஏஎஸ் என்பது மக்களுக்கான சேவை என்பதை பல மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அவ்வப்போது நிரூபித்து வருகிறார்கள்.அவர்களுடன் கந்தசாமி நிச்சயம் ஒரு மகுடமாய் ஜொலிப்பர்.

KANDASAMY IAS, TIRUVANNAMALAI, COLLECTOR